இங்கிலாந்தில் கிடைக்கும் ஒன்றரை மாத ஓய்வு பற்றி விராட் கோலி

ஆஸ்திரேலியத் தொடர் போல நீண்ட காலம் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டும் என்பது...
இங்கிலாந்தில் கிடைக்கும் ஒன்றரை மாத ஓய்வு பற்றி விராட் கோலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் இடையே உள்ள ஒன்றரை மாத இடைவெளி இந்திய அணிக்கு மிகவும் உதவும் என இந்தியன் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது. இந்தச் சுற்றுப்பயணத்துக்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் முடிவடைந்தவுடன் ஒன்றரை மாத இடைவெளிக்குப் பிறகே இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதுபற்றி இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி முடிந்த பிறகு மீண்டும் எங்களைப் புதுப்பித்துக்கொள்ள ஒன்றரை மாத இடைவெளி உதவும். ஒரு பெரிய தொடருக்குத் தயாராக இந்த இடைவெளி அவசியமாக உள்ளது. இங்கிலாந்தில் ஐந்து டெஸ்டுகளில் விளையாடுவது கடினமான ஒன்றாகும். இங்கிலாந்தில் ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படும்போது நாங்கள் எங்களுடைய தனிமைப்படுத்துதல் காலகட்டத்தை நிறைவு செய்திருப்போம். இதனால் நாங்கள் சில நாள்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் இயல்பாக இருக்கலாம். ஆஸ்திரேலியத் தொடர் போல நீண்ட காலம் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டும் என்பது கடினமானதாகும். உள்ளூர் மக்கள் போல நாங்களும் வெளியே சென்று எப்போதும் போல இருக்கலாம் என்கிற சுதந்திரம் இருந்தால் டெஸ்ட் தொடருக்குப் புதிய உற்சாகத்துடன் தயாராக முடியும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com