ஒப்பந்தம் இல்லாமல் இங்கிலாந்து செல்ல இலங்கை வீரர்கள் சம்மதம்
By DIN | Published On : 08th June 2021 12:53 PM | Last Updated : 08th June 2021 12:53 PM | அ+அ அ- |

கேப்டன் குசால் பெரேரா
புதிய ஒப்பந்தம் இல்லாமல் இங்கிலாந்து செல்ல இலங்கை வீரர் சம்மதித்துள்ளார்கள்.
இங்கிலாந்தில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இதற்கான இலங்கை டி20 அணியின் கேப்டனாக குசால் பெரேரா தேர்வாகியுள்ளார். இதையடுத்து இலங்கை ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக அவர் செயல்படவுள்ளார்.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஜூன் 23 அன்றும் டி20 தொடர் ஜூன் 29 அன்றும் தொடங்கவுள்ளன.
இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்காக இலங்கை அணி இரு நாள்களில் இங்கிலாந்துக்குப் புறப்படவுள்ள நிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வீரர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.
சமீபத்தில் 24 கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநர் டாம் மூடி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடற்தகுதியின் அடிப்படையில் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது, 2019 முதல் சிறப்பாக விளையாடியதற்காக 50 சதவீதமும் உடற்தகுதிக்கு 20 சதவீதமும் தலைமைப்பண்பு, தொழில்முறை, வருங்காலத் திறமை, அணிக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக 10 சதவீதமும் வழங்கப்படும் என வீரர்களுக்கு வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறைக்கு கேப்டன் குசால் பெரேரா உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு முன்பு 24 வீரர்கள் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது இதன் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. 38 வீரர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வீரர்களுக்குப் புள்ளிகள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதனால் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என அறிக்கையில் கூறியுள்ளார்கள்.
இலங்கை வீரர்கள் இங்கிலாந்துக்கு நாளை புறப்பட வேண்டும். இந்நிலையில் புதிய ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இங்கிலாந்துக்குச் செல்ல இலங்கை வீரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து இலங்கை வீரர்கள் இங்கிலாந்துக்கு நாளை புறப்படவுள்ளார்கள்.