இந்திய அணி பல போட்டிகளை வெல்லும்: கேன் வில்லியம்சன் நம்பிக்கை
By DIN | Published On : 29th June 2021 02:52 PM | Last Updated : 29th June 2021 02:52 PM | அ+அ அ- |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் தோற்றாலும் இந்திய அணி பல போட்டிகளை வெல்லும் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டெஸ்ட் உலக சாம்பியன் ஆனது நியூசிலாந்து அணி
ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது:
ஒரு போட்டியில் ஒரே ஒரு இறுதி ஆட்டத்தின் மூலம் வெற்றியாளரைத் தீர்மானிக்கிறார்கள். இதன்மூலம் ரசிகர்களுக்கு ஆர்வமும் பரபரப்பும் ஏற்படும். இது முழு கதையையும் சொல்லாது. இந்திய அணி மகத்தானதாக உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்திய அணியின் தரத்தை அந்தத் தோல்வியின் மூலம் குறை சொல்ல முடியாது. பல வருடங்களாக வலுவாக அணியாக உள்ளது. இந்திய அணி பல கோப்பைகளை வெல்லும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு, உலகத் தரமாக, சிறந்ததாக உள்ளது. சுழற்பந்துவீச்சும் அருமையாக உள்ளது. அவர்களுடைய பேட்டிங் உலகத் தரம். கிரிக்கெட் மீதான ஆர்வத்தை இந்திய அணி உண்டாக்குகிறது என்றார்.