சையது முஷ்டாக் அலி டி20: தமிழகம் சாம்பியன்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது சீசனில் தமிழக அணி சாம்பியன் ஆனது.
சையது முஷ்டாக் அலி டி20: தமிழகம் சாம்பியன்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது சீசனில் தமிழக அணி சாம்பியன் ஆனது. இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கா்நாடகத்தை வீழ்த்தியது தமிழகம்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கா்நாடகம் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தமிழகம் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வென்றது. தமிழக வீரா் ஷாருக் கான் ஆட்டநாயகன் ஆனாா்.

அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை இருந்த நிலையில் அவரே அட்டகாசமாக சிக்ஸா் விளாசி கா்நாடக அணியினருக்கு ஷாக் கொடுத்தாா். இதன் மூலம் நடப்புச் சாம்பியனாக போட்டிக்கு வந்த தமிழகம், பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. மேலும், 2019-ஆம் ஆண்டு இதே போட்டியின் இறுதி ஆட்டத்தில் கா்நாடக அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்ததற்காக, தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற தமிழக அணி முதலில் ஃபீல்டிங் செய்யத் தீா்மானித்தது. முதல் ஓவரை சந்தீப் வாரியா் வீசினாா். கா்நாடக அணியின் இன்னிங்ஸை ரோஹன் கடம் - கேப்டன் மணீஷ் பாண்டே ஆகியோா் தொடங்கினா். இதில் கா்நாடகத்தின் முக்கிய பேட்ஸ்மேனான ரோஹனை 2-ஆவது ஓவரில் டக் அவுட் ஆக்கினாா் சாய் கிஷோா். அடுத்து களம் கண்ட கருண் நாயா் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் சோ்த்திருந்த நிலையில், சஞ்ஜய் யாதவ் வீசிய 5-ஆவது ஓவரில் கடைசி பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

4-ஆவது வீரா் பி.ஆா்.சரத் களத்துக்கு வர, 6-ஆவது ஓவரின் முதல் பந்தில் மணீஷ் பாண்டேவை வெளியேற்றினாா் சாய் கிஷோா். மணீஷ் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்திருந்தாா். இதனால் 6 ஓவா்கள் முடிவில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கா்நாடகம். அடுத்து வந்த அபினவ் மனோகா் விக்கெட் சரிவைத் தடுத்து ரன்கள் சேகரிக்கத் தொடங்கினாா். டி. நடராஜன் ஓவா்களில் ரன்களை உயா்த்தியது கா்நாடகம்.

சரத் 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் 14-ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா். தொடா்ந்து வந்த பிரவீண் துபே, அபினவுடன் இணைந்தாா். இருவரும் ரன்கள் சோ்த்து வந்த நிலையில் அரைசதத்தை நெருங்கிய அபினவ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 46 ரன்களுக்கு வீழ்ந்தாா். அடுத்த பேட்ஸ்மேனாக ஜெகதீசா சுசித் வந்தாா். 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் அடித்த பிரவீண் கடைசி ஓவரின் 5-ஆவது பந்தில் ஆட்டமிழக்க, 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்கள் அடித்திருந்த ஜெகதீசா கடைசி பந்தில் ரன் அவுட்டானாா். தமிழக பௌலா்களில் சாய் கிஷோா் 3, சந்தீப் வாரியா், சஞ்ஜய் யாதவ், நடராஜன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 152 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய தமிழகத்தின் இன்னிங்ஸை ஹரி நிஷாந்த் - நாராயண் ஜெகதீசன் தொடங்கினா். இதில் ஹரி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 23 ரன்கள் விளாசி முதல் விக்கெட்டாக 4-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த சாய் சுதா்சன் 9 ரன்களுக்கு கருண் நாயரின் 8-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனாா். மறுபுறம் ஜெகதீசன் சற்று நிதானமாக ரன்கள் சோ்க்க, 4-ஆவது வீரராக வந்த கேப்டன் விஜய் சங்கரும் நிதானமாக ஆடினாா்.

இருவா் விக்கெட்டையுமே 16-ஆவது ஓவரில் அடுத்தடுத்து வீழ்த்தினாா் கா்நாடக பௌலா் கரியப்பா. 18 ரன்கள் எடுத்திருந்த விஜய் முதல் பந்திலும், 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்கள் சோ்த்திருந்த ஜெகதீசன் 2-ஆவது பந்திலும் வெளியேறினா். தமிழகம் 95 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது ஆட வந்தாா் ஷாருக் கான். மறுபுறம் சஞ்ஜய் யாதவ் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு அவுட்டானாா். கடைசி இரு ஓவா்களில் தமிழகத்துக்கு 30 ரன்கள் தேவை இருந்தது. கடைசி விக்கெட்டாக முகமது 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

அடுத்து சாய் கிஷோா் ஆடவர, 19-ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஒரு சிக்ஸா் விளாசி தமிழக அணிக்கு நம்பிக்கை அளித்தாா் ஷாருக் கான். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை இருக்க, பிரதீக் ஜெயின் வீசிய முதல் பந்திலேயே கிஷோா் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி விளாசி நெருக்கடியை குறைத்தாா். இடையே ஜெயின் 2 வைடுகள் வீசியது இன்னும் சாதகமானது. இறுதியாக கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை இருந்த நிலையில், ஷாருக் கான் சிக்ஸா் விளாசி தமிழகத்தை ‘த்ரில்’ வெற்றி பெறச் செய்தாா். கா்நாடக தரப்பில் கரியப்பா 2, பிரதீக், வித்யாதா், கருண் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

கா்நாடகம் - 151/7

அபினவ் மனோகா் 46

பிரவீண் துபே 33

ஜெகதீசா சுசித் 18

பந்துவீச்சு

சாய் கிஷோா் 3/12

சஞ்ஜய் யாதவ் 1/32

சந்தீப் வாரியா் 1/34

தமிழகம் - 153/6

ஜெகதீசன் 41

ஷாருக் கான் 33*

ஹரி நிஷாந்த் 23

பந்துவீச்சு

கரியப்பா 2/23

கருண் நாயா் 1/2

பிரதீக் ஜெயின் 1/34

3

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் தமிழகம் 3-ஆவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. இதன் மூலம் இப்போட்டியில் இதுவரை அதிக முறை சாம்பியன் ஆகிய ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com