இன்னும் ஒரு வருடத்தில் கால்பந்து உலகக் கோப்பை!

தோஹாவில் உலகக் கோப்பைக்கான கவுண்ட் டவுன் கடிகாரம் நிறுவப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வருடத்தில் கால்பந்து உலகக் கோப்பை!

இன்னும் ஒரு வருடத்தில் 2022 நவம்பர் 21 அன்று கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி தொடங்கவுள்ளது. 

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறும் என ஃபிஃபா அமைப்பு 2010 டிசம்பரில் அறிவித்தது. நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்கள் இப்போட்டிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இதுவரை கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்திய நாடுகளிலேயே மிகச்சிறியது கத்தார் தான். இதற்கு முன்பு கத்தாரை விட மூன்று மடங்கு பெரிய நாடான ஸ்விட்சர்லாந்து 1954-ல் உலகக் கோப்பையை நடத்தியது. ஆனால் அப்போது 16 அணிகளே பங்கேற்றன. இப்போது 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. 

28 லட்சம் மக்கள் தொகை கொண்ட கத்தார், கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் முதல் அரபு நாடாகும். 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இன்னும் ஒரு வருடத்தில் உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதால் தோஹாவில் உலகக் கோப்பைக்கான கவுண்ட் டவுன் கடிகாரம் நிறுவப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com