இன்று முதல் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: முக்கிய அம்சங்கள்

ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியை ஜெர்மனி அதிகபட்சமாக 6 முறையும் இந்தியா 2 முறையும் வென்றுள்ளன.
ஹாக்கி ஜுனியர் உலகக் கோப்பைப் போட்டி
ஹாக்கி ஜுனியர் உலகக் கோப்பைப் போட்டி


கடந்த செப்டம்பர் மாதம் தான் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை, ஒடிஸாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று போட்டியை நடத்தத் தயாராகிவிட்டது ஒடிஸா. 

ஆடவா் ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் முதல் நாளான இன்று, நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பிரான்ஸை எதிா்கொள்கிறது. போட்டியில் 4 குரூப்கள் இருக்கும் நிலையில், லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும்.

இப்போட்டியில் இதுவரை இருமுறை சாம்பியன் ஆகியிருக்கிறது இந்தியா. முதலில் 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியிலும், பிறகு 2016-ல் லக்னௌவில் நடைபெற்ற போட்டியிலும் கோப்பை வென்றிருக்கிறது. சீனியா் நிலையில் பிரதான போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற ஜூனியா் வீரா்களுக்கான நல்லதொரு வாய்ப்பாக இந்த உலகக் கோப்பை போட்டி அமையும்.

அமெரிக்க அணி
அமெரிக்க அணி

* 2018-ல் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை, 2017-ல் எஃப்.ஐ.எச். வேர்ல்ட் லீக் இறுதிச்சுற்று, 2014 சாம்பியன்ஸ் கோப்பை என முக்கியமான ஹாக்கி போட்டிகளைச் சமீபத்தில் நடத்தியுள்ளது ஒடிஸா. 

* ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் (வெண்கலம்) வென்ற இந்திய சீனியா் ஆடவா் அணியில் இடம்பிடித்த வீரர்களில் பலர் 2016-ம் ஆண்டு ஜூனியா் உலகக் கோப்பை போட்டியில் விளையாடியவா்கள். இந்திய ஜூனியர் அணியின் கேப்டனாக இருக்கும் விவேக் சாகா் பிரசாத், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவர். 

* கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இப்போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்கவில்லை. எனவே இப்போட்டியை இந்தியா, பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய அணிகளில் ஒன்று வெற்றி பெறும் எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று அணிகள் பங்கேற்காததால் அமெரிக்கா, கனடா, போலந்து ஆகிய அணிகள் இப்போட்டியில் விளையாடுகின்றன. 

ஜெர்மனி அணி
ஜெர்மனி அணி

* ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியை ஜெர்மனி அதிகபட்சமாக 6 முறையும் இந்தியா 2 முறையும் வென்றுள்ளன. நெதர்லாந்து அணி ஒருமுறை கூட இப்போட்டியை வென்றதில்லை. 

* இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கிரஹாம் ரீட், துணைப் பயிற்சியாளர் பி.ஜே. கரியப்பா ஆகியோர் பணியாற்றுகிறார்கள். 

* டிசம்பர் 1 அன்று காலிறுதிச் சுற்று, டிசம்பர் 3 அன்று அரையிறுதிச் சுற்று, டிசம்பர் 5 அன்று இறுதி ஆட்டம் ஆகியவை நடைபெறுகின்றன. இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, ஆட்டங்களை நேரலையாக ஒளிபரப்புகிறது.  

* கரோனா பரவல் காரணமாக எந்தவொரு ஆட்டத்துக்கும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. 

ஏற்பாடுகளைக் கவனிக்கும் ஒடிஸா விளையாட்டுத்துறை அமைச்சர்
ஏற்பாடுகளைக் கவனிக்கும் ஒடிஸா விளையாட்டுத்துறை அமைச்சர்

* மகளிர் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டி தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 5 முதல் 16 வரை நடைபெறுகிறது. ஆர்ஜென்டினா, ஜப்பான், ரஷியா ஆகிய அணிகள் கொண்ட பிரிவில் இந்திய மகளிர் அணி இடம்பெற்றுள்ளது. 

* ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா:

2016 – சாம்பியன், 2013 – 10-ம் இடம், 2009 – 9-ம் இடம், 2005 – 4-ம் இடம், 2001 – சாம்பியன், 1997 – 2-ம் இடம், 1985 – 5-ம் இடம், 1982 – 5-ம் இடம், 1979 – 5-ம் இடம்

* இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள்

நவம்பர் 24 - இந்தியா vs பிரான்ஸ் - இரவு 8 மணி
நவம்பர் 25 - இந்தியா vs கனடா - இரவு 7.30 மணி
நவம்பர் 27 - இந்தியா vs போலந்து - இரவு 7.30 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com