ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நேரலை ஒளிபரப்பில் சிக்கல்: சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அதிருப்தி

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியை இணையத்தில் நேரலையாக ஒளிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு...
இந்தியா - பிரான்ஸ் ஆட்டம்
இந்தியா - பிரான்ஸ் ஆட்டம்

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியை இணையத்தில் நேரலையாக ஒளிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு சர்வதேச ஹாக்கி சம்மேளனம் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

ஆடவா் ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இப்போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்கவில்லை. டிசம்பர் 1 அன்று காலிறுதிச் சுற்று, டிசம்பர் 3 அன்று அரையிறுதிச் சுற்று, டிசம்பர் 5 அன்று இறுதி ஆட்டம் ஆகியவை நடைபெறுகின்றன. கரோனா பரவல் காரணமாக எந்தவொரு ஆட்டத்துக்கும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.  இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, நாக் அவுட் ஆட்டங்களை நேரலையாக ஒளிபரப்புகிறது.  

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-5 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. 

இந்நிலையில் உலகக் கோப்பை ஆட்டங்கள் Watch.Hockey என்கிற இணையத்தளத்திலும் அதன் செயலியிலும் நேரலையாக ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் ஆட்டத்தை நேரலையாகப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் செயலியும் இணையத்தளமும் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்தியாவின் ஆட்டத்தைப் பார்க்க முடியாத நிலை ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

இதையடுத்து சர்வதேச ஹாக்கி சம்மேளனம் தனது அதிருப்தியைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா - பிரான்ஸ் ஆட்டத்தை நேரலையாகப் பார்க்க சிக்கல் ஏற்பட்டதை அறிந்து சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வேதனையடைந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வருங்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க முடியும். போட்டி தொடர்ந்து நடைபெறும்போது அதிகமான ஹாக்கி ரசிகர்கள் நேரலை ஒளிபரப்பைக் கண்டுகளிப்பார்கள் என நம்புகிறோம் என்று கூறியுள்ளது. 

இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள்

நவம்பர் 24 - இந்தியா vs பிரான்ஸ் - இரவு 8 மணி (இந்தியா தோல்வி)
நவம்பர் 25 - இந்தியா vs கனடா - இரவு 7.30 மணி
நவம்பர் 27 - இந்தியா vs போலந்து - இரவு 7.30 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com