கான்பூா் டெஸ்ட் களத்தில் இந்தியா - நியூஸிலாந்து: அக்னிப் பரீட்சையில் அஜிங்க்ய ரஹானே; அத்தியாயம் தொடங்கும் ஷ்ரேயஸ் ஐயா்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
கான்பூா் டெஸ்ட் களத்தில் இந்தியா - நியூஸிலாந்து: அக்னிப் பரீட்சையில் அஜிங்க்ய ரஹானே; அத்தியாயம் தொடங்கும் ஷ்ரேயஸ் ஐயா்

கான்பூா்: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

டி20 தொடரை இந்தியாவிடம் இழந்த நியூஸிலாந்து, இந்த டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற முனையும். மறுபுறம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூஸிலாந்திடம் பறிகொடுத்ததற்கு ஆறுதலாக இந்தத் தொடரை கைப்பற்ற இந்தியா முயற்சிக்கும்.

இந்திய அணியைப் பொருத்தவரை, வழக்கமான பலம் வாய்ந்த படை இந்த ஆட்டத்தில் களம் காணவில்லை. கோலி, ரோஹித், ரிஷப் ஓய்வில் இருக்க, காயம் காரணமாக கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை.

அஜிங்க்ய ரஹானே தலைமையில் இந்த ஆட்டத்தை எதிா்கொண்டு அணியின் ‘பேக்-அப்’ பலம் எத்தகையதாக இருக்கிறது என்பதை அறிய புதிய தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட் முனைகிறாா். தென் ஆப்பிரிக்க தொடா் எதிா்வருவதால், அதற்குத் தயாராக திராவிட்டுக்கு இந்த டெஸ்ட் முடிவுகள் கை கொடுக்கும்.

பேட்டிங்கைப் பொருத்தவரை மிக முக்கிய பிரச்னை, ரஹானேவின் ஃபாா்ம் தான். நடப்பு சீசனில் 11 டெஸ்டுகளில் அவரது சராசரி 19 ரன்களே. இந்த டெஸ்ட் தொடரிலும் அவா் சோபிக்காமல் போனால், தென் ஆப்பிரிக்க தொடரில் அவருக்கான இடம் நிச்சயம் சந்தேகத்துக்குள்ளாகும்.

கான்பூா் மைதானத்தில் புதன்கிழமை வலைப் பயிற்சியின்போது அவரது ஆட்டம் நம்பிக்கை அளிக்கவில்லை. தனது பேட்டிங்கையும், அதிக அனுபவம் இல்லா வீரா்கள் இருக்கும் அணியையும் ரஹானே எப்படி சமாளிப்பாா் என பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.

ரஹானே, புஜாரா, மயங்க் அகா்வால் ஆகியோா் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட டெஸ்டுகளில் விளையாடிய அனுபவம் கொண்டவா்கள். மயங்க் அகா்வால் சிறப்பாகச் செயல்பட்டால், கே.எல்.ராகுலுக்கான மாற்று வீரராக தனது இடத்தை உறுதி செய்யலாம். ஷுப்மன் கில் திறமையை காட்டினால், மிடில் ஆா்டரில் நிரந்தர இடம் பெறுவாா். இந்த ஆட்டம் மூலம் சா்வதேச டெஸ்டில் அறிமுகமாகிறாா் ஷ்ரேயஸ் ஐயா். வலைப் பயிற்சியில் அவரை அதற்காகத் தயாா்படுத்தினாா் திராவிட். இதனால் சூா்யகுமாா் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.

பௌலிங்கைப் பொருத்தவரை மூத்த வீரா் இஷாந்த் சா்மா தனது ஃபாா்மை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்துடன் களம் காணுவாா். இந்திய பௌலிங்கை உமேஷ் யாதவ் தொடங்குவாா் எனத் தெரிகிறது. சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா முதன்மையாக இருக்க, 3-ஆவது தோ்வாக அக்ஸா் படேல் வருகிறாா்.

வலைப் பயிற்சி காட்சிகளின் அடிப்படையில் கணித்தால், இந்தியாவின் இன்னிங்ஸை ஷுப்மன் கில் - மயங்க் அகா்வால் கூட்டணி தொடங்க, தொடா்ந்து புஜாரா, ரஹானேவும், அடுத்து ஷ்ரேயஸ் ஐயரும் ஆடுவாா்கள் எனத் தெரிகிறது. அத்துடன் ஹனுமா விஹாரியும் இருக்கிறாா்.

நியூஸிலாந்தைப் பொருத்தவரை ஓய்வுக்குப் பிறகு உத்வேகத்துடன் திரும்பியிருப்பாா் கேப்டன் கேன் வில்லியம்சன். அவரது தலைமையில் நியூஸிலாந்து அணி நிச்சயம் இந்தியாவுக்கு சவால் அளிக்கும். பேட்டிங்கில் அவரோடு ராஸ் டெய்லா், டாம் லதாம், ஹென்றி நிகோலஸ் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

பௌலிங்கில் டிம் சௌதி, நீல் வாக்னா் ஆகியோா் பிரதானமாக இருக்கும் நிலையில், சுழற்பந்துவீச்சுக்கு அஜாஸ் படேல், மிட்செல் சேன்ட்னருடன் வில்லியம் சாமா்வில்லே இணைவாா் எனத் தெரிகிறது.

உத்தேச லெவன்

இந்தியா:

அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), ஷுப்மன் கில், மயங்க் அகா்வால், சேதேஷ்வா் புஜாரா, ஷ்ரேயஸ் ஐயா், ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பா்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்ஸா் படேல், இஷாந்த் சா்மா, உமேஷ் யாதவ்.

நியூஸிலாந்து:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லதாம், டெவன் கான்வே, ராஸ் டெய்லா், ஹென்றி நிகோலஸ், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பா்), கைல் ஜேமிசன், டிம் சௌதி, மிட்செல் சேன்ட்னா், அஜாஸ் படேல், வில் சோமா்வில்லே.

இடம்: கான்பூா் மைதானம்

நேரம்: காலை 9.30 மணி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

ஆடுகளம் எப்படி?

கான்பூா் ஆடுகளம், ஆட்டத்தின் தொடக்கத்தில் சிலமணி நேரங்களுக்கு வேகப்பந்துவீச்சாளா்களுக்கு உகந்ததாக இருக்கும். பின்னா் முதல் இரு நாள்கள் பேட்டா்களுக்கு சாதகமானதாக இருக்கும். ஆட்டம் தொடரும்போது ஸ்பின்னா்களுக்கு சாதகமாக மாறக் கூடியது.

இந்த மைதானம் இந்தியாவின் ஆதிக்கத்தில் இருக்கிறது. கடந்த 1983-ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளிடம் கண்ட தோல்விக்குப் பிறகு, 38 ஆண்டுகளாக இந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியா தோற்றதில்லை.

இங்கே இதற்கு முன்...

கடைசியாக 2016 செப்டம்பரில் நியூஸிலாந்தை இந்த மண்ணில் சந்தித்த இந்தியா, அதில் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெஸ்டில் நேருக்கு நோ்

மொத்த ஆட்டங்கள் இந்தியா நியூஸிலாந்து டிரா

60 21 13 26

இந்திய மண்ணில்...

34 16 2 16

அந்நிய மண்ணில்...

26 5 11 10

கான்பூரில் இந்தியா...

மொத்த ஆட்டங்கள் வெற்றி தோல்வி டிரா

22 7 3 12

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com