இந்தியாவில் நான் ஒரு ஹாலிவுட் நட்சத்திரம்: டேல் ஸ்டெயின்
By DIN | Published On : 01st September 2021 04:57 PM | Last Updated : 01st September 2021 04:57 PM | அ+அ அ- |

இந்தியாவில் ஒரு பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரத்துக்கு இணையாக ரசிகர்கள் தனக்கு ஆதரவு தந்ததாக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார்.
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகப் பிரபல வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் நேற்று அறிவித்தார்.
38 வயது ஸ்டெய்ன், தென்னாப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்டுகள், 125 ஒருநாள், 47 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2004-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஸ்டெய்ன், கடைசியாகக் கடந்த வருடம் டி20 சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். 2019 ஆகஸ்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2020 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வம் தெரிவித்தார். ஆனால் அப்போட்டி ஒத்திவைக்கப்பட்டு இந்த வருடம் நடைபெறுகிற நிலையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2008-ல் இருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடும் டேல் ஸ்டெய்ன், இதுவரை 95 ஆட்டங்களில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2020-ல் ஆர்சிபி அணி சார்பாக 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகுவதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.
உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக மதிப்பிடப்படும் டேல் ஸ்டெய்ன், திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கரோனா சூழல் காரணமாக அவரால் கடந்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு வேறு எந்தச் சர்வதேச ஆட்டங்களிலும் விளையாட முடியாமல் போய்விட்டது.
இந்நிலையில் இந்திய ரசிகர்கள் பற்றி ஒரு பேட்டியில் டேல் ஸ்டெயின் கூறியதாவது:
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அமோக ஆதரவு உண்டு. ஒரு ராக் ஸ்டாருக்கு இணையாக உங்களை நீங்கள் உணரும் வாய்ப்பு உள்ளது. ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரத்துக்கு இணையாக நடத்துவார்கள். நீங்கள் விமான நிலையத்துக்குச் சென்றால் உங்களைச் சூழ்ந்து கொள்வார்கள். பயிற்சிக்குச் சென்றால் அங்கு 10,000 பேர் இருப்பார்கள். என் வாழ்க்கையில் அதுபோன்ற மற்றொரு அனுபவம் கிடைக்குமா எனத் தெரியவில்லை என்றார்.