மனைவியைப் பிரிந்தார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன்

2012-ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அயிஷாவைத் திருமணம் செய்தார்
படம் - www.instagram.com/shikhardofficial/
படம் - www.instagram.com/shikhardofficial/

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன், தனது மனைவி அயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவன், 2012-ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அயிஷாவைத் திருமணம் செய்தார். அயிஷாவுக்கு இது 2-வது திருமணம். முதல் திருமணத்தில் ஆஸ்திரேலியத் தொழிலதிபரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். ஷிகர் தவனைத் திருமணம் செய்த பிறகு 2014-ல் ஸோராவர் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. அயிஷா, சர்வதேச அளவில் கிக்பாக்ஸிங்கில் பங்கேற்றுள்ளார். 
 
46 வயது அயிஷா, விவாகரத்து குறித்து இன்ஸ்டகிராமில் மிகவும் உருக்கமான பதிவு எழுதியுள்ளார்.

2-வது முறை விவாகரத்து செய்யும் வரை விவாகரத்து என்பதை மோசமான வார்த்தையாக எண்ணியிருந்தேன். முதல்முறை விவாகரத்து ஆனபோது மிகவும் பயந்து போனேன். நான் தோற்றுவிட்டேன் என்றும் அப்போது தவறு செய்கிறேன் என்றும் நினைத்தேன். மிகவும் சுயநலமாக நடந்துகொண்டு பெற்றோர், என் குழந்தைகள், கடவுள் என எல்லோரையும் ஏமாற்றியதாக எண்ணினேன். விவாகரத்து ஒரு மோசமான வார்த்தை. நினைத்துப் பாருங்கள். இப்போது விவாகரத்தை மீண்டும் எதிர்கொண்டுள்ளேன். இது பயங்கரமாக உள்ளது. 2-வது முறை என்னை நிறைய நிரூபிக்கவேண்டும் என எண்ணினேன்.  2-வது திருமணமும் உடைந்ததால் அச்சத்தில் இருந்தேன். பயம் தோல்வி, ஏமாற்றம் எல்லாம் 100 மடங்கு கூடுதலாக இருந்தன. இது எனக்கு என்ன சொல்கிறது? இது என்னை, திருமண உறவில் எப்படி வெளிப்படுத்துகிறது?  

இதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உணர்வுகளையும் எதிர்கொண்ட பிறகு அமர்ந்து யோசித்துப் பார்த்தேன். நான் நலமுடன் உள்ளேன். பயம் போய்விட்டது. இப்போது கூடுதல் உரிமை கொண்டவளாக உள்ளேன். எனது பயமும் விவாகரத்துக்கு நான் அளித்த அர்த்தமும் நானே உருவாக்கியவை என்று கூறியுள்ளார்.

35 வயது ஷிகர் தவன் இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 145 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com