
உலகப் புகழ்பெற்ற வீரர் ரொனால்டோ உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டது இந்தமுறையும் நடக்கவில்லை. தோஹாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோவிடம் 0-1 எனத் தோற்று வெளியேறியிருக்கிறது போர்ச்சுகல். ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பை இதுவே என அறியப்படுகிறது.
இந்நிலையில் உலகக் கோப்பை தோல்வி பற்றி 37 வயது ரொனால்டோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய வாழ்க்கையில் போர்ச்சுகலுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தரவேண்டும் என்பதே என் வாழ்நாள் கனவாக இருந்தது. நல்வாய்ப்பாக நான் சர்வதேச அளவில் பல கோப்பைகளை வென்றுள்ளேன். எனினும் என் நாட்டின் பெயரை சர்வதேச அளவில் கொண்டு செல்லவேண்டும் என்பதே கனவாக இருந்தது. இந்தக் கனவுக்காக நான் போராடினேன். கடந்த 16 வருடங்களில் 5 உலகக் கோப்பைகளில் கோல்கள் அடித்துள்ளேன்.
மிகச்சிறந்த வீரர்களுடன் விளையாடினேன். லட்சக்கணக்கான போர்ச்சுகல் ரசிகர்கள் எனக்கு ஆதரவளித்தார்கள். அணிக்காக அனைத்தையும் வழங்கினேன். போட்டியிலிருந்து நான் பின்வாங்கியதில்லை. கனவை விட்டுக்கொடுக்கவில்லை.
துரதிர்ஷ்டவசமாக கனவு முடிந்தது. இதைப் பற்றி பலரும் பலவிதமாக எழுதிவிட்டார்கள், பேசி விட்டார்கள். அனைவருக்கும் ஒன்றைத் தெரியப்படுத்த விரும்புகிறேன், போர்ச்சுகல் அணிக்கான என்னுடைய உழைப்பு ஒருபோதும் மாறவில்லை. அனைவரும் கோலடிக்க உதவும் இன்னொரு வீரராக நான் இருந்தேன். என் அணிக்காகவும் வீரர்களுக்காகவும் நான் எப்போதும் மறுத்ததில்லை. இப்போது மேலும் எதுவும் சொல்வதற்கில்லை. போர்ச்சுகலுக்கு நன்றி, கத்தாருக்கு நன்றி. கனவு இருந்தவரை அது அழகானதாக இருந்தது. தற்போது காலம் சிறந்த ஆலோசனையை வழங்கி ஒவ்வொருவரும் ஒரு முடிவுக்கு வர உதவும் என்று கூறியுள்ளார்.
போர்ச்சுகல் அணிக்காக 195 ஆட்டங்களில் விளையாடி 118 கோல்கள் அடித்துள்ளார் ரொனால்டோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.