மெஸ்ஸி, எம்பாப்பேவின் சாதனைகளும் கத்தார் உலகக் கோப்பைப் புள்ளிவிவரங்களும்!

ஒரு உலகக் கோப்பையில் 5 முறை சிறந்த வீரர் விருதை வென்ற ஒரே வீரர் மெஸ்ஸி. 
மெஸ்ஸி, எம்பாப்பேவின் சாதனைகளும் கத்தார் உலகக் கோப்பைப் புள்ளிவிவரங்களும்!

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. 

1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. 1962-க்குப் பிறகு அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்ற அணி என்கிற பெருமையைப் பெறுவதற்காக பிரான்ஸ் கடுமையாக முயன்றது. இறுதியில் பெனால்டியில் தோற்றுப் போனது. உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்த 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார் பிரான்ஸின் எம்பாப்பே. பரிசளிப்பு விழாவில் தங்கக் காலணி விருது எம்பாப்பேவுக்கு வழங்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.

உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளும் முக்கியமான புள்ளிவிவரங்களும்


* உலகக் கோப்பைப் போட்டியில் அதிக கோல்கள் அடிக்கப்பட்டது இம்முறைதான். 1998, 2014 உலகக் கோப்பைகளில் தலா 171 கோல்கள் அடிக்கப்பட்டன. இம்முறை 172 கோல்கள்.

* ஒருமுறைக்கு மேல் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் மெஸ்ஸி வென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டு போட்டியில் (Coupe de France) மட்டும் ஒருமுறை பங்கேற்று அவரால் வெல்ல முடியாமல் போனது. 

* 1966-ல் இங்கிலாந்தின் ஜெஃப் ஹர்ஸ்ட் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். அதற்கடுத்ததாக பிரான்ஸின் எம்பாப்பே ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார்.

* 8-வது முறையாக உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றுள்ளது. கடந்த 7 ஆட்டங்களில் 2 ஆட்டங்கள் மட்டுமே பெனால்டிக்குச் சென்றுள்ளது. இந்த நூற்றாண்டில் 2006, 2010, 2014, 2022 என நான்கு முறை இறுதிச்சுற்று ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றுள்ளது.    

* பிரான்ஸின் எம்பாப்பே 1 நிமிடம் 37 விநாடிகள் இடைவெளியில் இரு கோல்களை அடித்தார். இதுபோல உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் அடுத்தடுத்த நிமிடங்களில் கோல் அடிக்கப்பட்டது இதுவே முதல்முறை. 

* தொடர்ச்சியாக இரு உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றுகளில் கோல்கள் அடித்த 2-வது வீரர் என்கிற பெருமையையும் எம்பாப்பே பெற்றுள்ளார். 

* கடைசி 20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுகளில் முதலில் கோல் அடித்த அணிகளில், 12 அணிகள் உலகக் கோப்பையை வென்றுள்ளன. 1954 இறுதிச்சுற்றில் மட்டும் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக ஹங்கேரி அணி முதலில் இரு கோல்கள் அடித்தும் கடைசியில் 2-3 எனத் தோற்றது. 

* உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான விருது இருமுறை வென்றுள்ளார் மெஸ்ஸி. இதற்கு முன்பு 2014-ல் ஆர்ஜென்டீனா 2-வது இடம் பிடித்தபோது இதே விருது அவருக்கு வழங்கப்பட்டது.

* உலகக் கோப்பையில் குரூப் நிலை, காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதிச்சுற்று என ஒரு போட்டியில் அனைத்து கட்டங்களிலும் கோலடித்த ஒரே வீரர் மெஸ்ஸி. 

* ஒரு உலகக் கோப்பையில் 5+ கோல்கள் அடித்து, கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை 20+ முறை உருவாக்கிய இரு வீரர்கள், 1986-ல் மரடோனா, 2022-ல் மெஸ்ஸி. 

* ஒரு உலகக் கோப்பையில் 5 முறை சிறந்த வீரர் விருதை வென்ற ஒரே வீரர் மெஸ்ஸி. 

* 13 கோல்களுடன் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைனுடன் இணைந்து 4-வது இடத்தில் உள்ளார் மெஸ்ஸி.

* ஆர்ஜென்டீனாவுக்காக உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா ஆகிய முக்கியமான போட்டிகளில் 26 கோல்கள் அடித்துள்ளார் மெஸ்ஸி. தென் அமெரிக்க வீரர்களில் யாரும் இவ்விரு போட்டிகளிலும் இத்தனை கோல்கள் அடித்ததில்லை. 

* உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடியவர் மெஸ்ஸி - 26 ஆட்டங்கள். 

* உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் தோற்று பிறகு உலகக் கோப்பையை வென்ற 2-வது அணி, ஆர்ஜென்டீனா. 2010-ல் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி, முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்திடம் வீழ்ந்தது. 

* ஒரு உலகக் கோப்பையில் 23 வயதுக்குட்பட்ட வீரர்களில் அதிக கோல்கள் அடித்தவர் பிரான்ஸின் எம்பாப்பே. 8 கோல்கள். பீலே உள்ளிட்ட மூவர் தலா 6 கோல்கள் அடித்துள்ளார்கள். 

* வேறு எந்த வீரரை விடவும் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் அதிக கோல்கள் அடித்தவர் எம்பாப்பே. 4 கோல்கள். 

* இதுவரை எந்தவொரு உலகக் கோப்பையில் 5 பெனால்டி ஷுட்அவுட்கள் நடந்ததில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com