தோனி பாணியில் சிக்ஸர் அடித்த வெங்கடேஷ் ஐயர்: இந்தியா வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தோனி பாணியில் சிக்ஸர் அடித்த வெங்கடேஷ் ஐயர்: இந்தியா வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் டி20 ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி மட்டும் அடித்து அதே ஓவரில் பிராண்டன் கிங் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, மேயர்ஸ் மற்றும் நிகோலஸ் பூரன் பாட்னர்ஷிப் அமைத்தனர். 

ரன் குவிக்க சிரமமாக இருந்தபோதிலும், பவுண்டரிகளில் ரன் குவித்ததால் ரன் ரேட் ஓவருக்கு 7-ஐ தாண்டி உயர்ந்தது. பவர் பிளே முடிந்தவுடன் சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்த யுஸ்வேந்திர சஹால் சுழலில் மேயர்ஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். ராஸ்டன் சேஸ், ரோவ்மேன் பாவெல் ஆகியோர் சொற்ப ரன்களில் அறிமுக நாயகன் ரவி பிஷ்னாய் சுழலில் ஆட்டமிழந்தனர். முன்கூட்டி களமிறக்கப்பட்ட அகீல் ஹோசைன் பரிசோதனையும் தோல்வியில் முடிந்தது. மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூரன் அரைசதம் கடந்து அசத்தினார்.

சிக்ஸர்களிலும் பவுண்டரிகளிலும் ரன் குவித்து விளையாடிய அவர் கடைசி நேர அதிரடியில் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இதுவரை நிதானம் காட்டி வந்த கேப்டன் கைரன் பொல்லார்ட் அதிரடிக்கு மாறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பொல்லார்ட் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் ரவி பிஷ்னாய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

பின்னர் 158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா 40 ரன்களும், இஷான் கிஷன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் நடுவரிசையில் களம்கண்ட விராத் கோலி(17), ரிஷப் பந்த்(8) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ்ஐயர் இருவரும் வேகமாக ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 

தோனி பாணியில் சிக்ஸர் அடித்து வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். சூர்யகுமார் யாதவ் 34 ரன்களுடனும், வெங்கடேஷ்ஐயர் 24 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com