தோல்வி பயத்தில் இந்தியா: மிரட்டிய இங்கிலாந்து பேட்டர்கள் (4-ம் நாள் ஹைலைட்ஸ் விடியோ)

இங்கிலாந்து அணி 4-ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 
தோல்வி பயத்தில் இந்தியா: மிரட்டிய இங்கிலாந்து பேட்டர்கள் (4-ம் நாள் ஹைலைட்ஸ் விடியோ)
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 4-ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சதமடித்த பேர்ஸ்டோ, 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிராஜ் 4, பும்ரா 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில்  45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. பும்ரா 50, ரிஷப் பந்த் 30 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

4-ம் நாளில் இந்திய அணி பேட்டிங்கில் பொறுப்புடன் விளையாடாததால் 81.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. புஜாரா 66, ரிஷப் பந்த் 57 ரன்கள் எடுத்தார்கள். பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி வழக்கம்போல பந்துவீச்சில் அசத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து பேட்டர்கள் அபாரமாக விளையாடி இந்திய அணிக்கும் ரசிகர்களும் ஆச்சர்யம் அளித்தார்கள். அலெக்ஸ் லீஸும் ஸாக் கிராவ்லியும் முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தார்கள். லீஸ் 56, கிராவ்லி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். போப் டக் அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 109 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும் ஜானி பேர்ஸ்டோவும் விரைவாக ரன்கள் குவித்து இந்திய அணியின் திட்டங்களையும் கனவுகளையும் முறியடித்தார்கள். இந்திய வீரர்கள் அவர்கள் அளித்த இரண்டு கேட்சுகளையும் நழுவவிட்டார்கள். 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 76, பேர்ஸ்டோ 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 119 ரன்களே தேவைப்படுகின்றன. கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமுள்ளதால் வரலாற்று வெற்றியை அந்த அணி இன்று அடையவுள்ளது. அல்லது கடைசி நாளில் இந்திய அணி ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாமா? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com