‘வெள்ளி’ மங்கை மீராபாய் சானு: தங்கக் கம்மல் மின்னும் பைங்கிளி!

ஒரு தலைமுறைக்கு மீராபாய் போல ஒருவர் தான் கிடைப்பார்...
‘வெள்ளி’ மங்கை மீராபாய் சானு: தங்கக் கம்மல் மின்னும் பைங்கிளி!

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை. பளு தூக்குதலில் 21 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குக் கிடைத்த பதக்கம். தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற 5-வது இந்தியர். 

இத்தனை சாதனைகளையும் படைத்துவிட்டு, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு சொன்னது - ஒரு துண்டு பீட்சா சாப்பிட வேண்டும். 

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகு இனிமேல் சாக்லேட் கேக்கை விரும்பியபோதெல்லாம் சாப்பிடுவேன் என்றார். பி.வி. சிந்து ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற பிறகு பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டர். அதேபோல மீராபாய்க்கு பீட்சா. இதற்கு ஏங்கும் அளவுக்குத்தான் 5 வருடங்களாக அவர் கடும் பயிற்சி எடுத்திருந்தார்.

சிறுவயதில் மீராபாய்க்கு ஊக்கமாக இருந்த குஞ்சராணி தேவி, மீராபாய் பெரிய அளவில் சாதிக்கும் முன்பே அவரைப் பற்றி 2016-ல் சொன்னார் - ஒரு தலைமுறைக்கு மீராபாய் போல ஒருவர் தான் கிடைப்பார்.

*

மணிப்பூரின் தலைநகர் இம்பாலின் தெற்கே 45 கி.மீ. தொலைவில் உள்ளது நாங்பாக் கக்சிங் கிராமம். சிறுவயதில் மீராபாய் வீட்டில் ஆறு குழந்தைகள். அவர்களில் இளையவர், மீராபாய். மூன்று சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். விவசாயக் குடும்பம். அண்ணன் என்ன எடை தூக்கினாலும் அதைவிட அதிக எடை கொண்ட பொருளைத் தூக்கிக் காண்பிப்பார் மீராபாய். 12 வயதில் பெரிய பெரிய மரக்கட்டைகளை எடுத்துச் செல்வதைக் கவனித்திருக்கிறார் அவருடைய தாய். மகளிடம் விளையாட்டு வீராங்கனைக்கான திறமைகள் உள்ளதை அவர் உணர்ந்தார். முதலில் வில்வித்தை வீரராக வேண்டும் என்பதுதான் மீராபாயின் விருப்பமாக இருந்தது. ஆனால் தங்களுடைய மண்ணிலிருந்து கிளம்பி சர்வதேச அரங்கில் ஜொலித்த குஞ்சராணி தேவியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் போலவே பளு தூக்குதல் விளையாட்டில் சாதிக்க எண்ணினார். இது காகிதக் கனவு அல்ல என்று தாய்க்குத் தெரிந்ததால் ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்தினார். 

முறையான பயிற்சிகள், பெற்றோரின் ஊக்கம் போன்றவற்றால் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய். இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் பதக்கம் வெல்வார் என்கிற சிறு நம்பிக்கை பலரிடமும் இருந்தது.

ரியோ ஒலிம்பிக் போட்டியை இப்போது நினைத்தாலும் மிகவும் சங்கடப்படுவார் மீராபாய் சானு.

மகள் தன்னுடைய முதல் ஒலிம்பிக்ஸிலேயே தங்கம் வெல்ல வேண்டும் என்று தன்னுடைய நகைகளை விற்று மகளுக்கு ஒலிம்பிக் வளையம் கொண்ட தங்கக் கம்மல்களை வாங்கித் தந்திருந்தார் மீராபாயின் தாய். முதலில் செயின் தருவதாகத்தான் இருந்தார். ஆனால், போட்டியின்போது செயினை அணிவது கடினம் என்று கம்மல்களை வாங்கிக்கொண்டார் மீராபாய். இக்கம்மல்கள் உனக்கு நிறைய பதக்கங்களையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் என்றார் தாய்.

ஒலிம்பிக் போட்டி வளாகத்துக்குள் நுழைந்தபோது இருந்த உற்சாகமும் ஆர்வமும் திரும்பி வரும்போது காணாமல் போனது. பெரிய தோல்வி. அழுதபடி தன் அறைக்குத் திரும்பினார். முதல் ஒலிம்பிக் போட்டி என்றாலும் திட்டப்படி எதுவும் நடக்கவில்லை. இத்தனைக்கும் அதற்கு முன்பு சாதித்ததை ரியோவில் செய்திருந்தாலே பதக்கம் கைக்கு வந்திருக்கும். 

(பளு தூக்குதல் விளையாட்டில் ஸ்னாட்ச் என்றால் எடையை அப்படியே அலேக்காகத் தலைக்கு மேலே தூக்கவேண்டும். கிளீன் & ஜெர்க் என்றால் முதலில் கழுத்துப் பக்கம் எடையைக் கொண்டு சென்றுவிட்டு, அதன்பிறகு தலைக்கு மேலே தூக்க வேண்டும். இதில் அதிக எடையைத் தூக்கிவிட முடியும்.)

ரியோ ஒலிம்பிக்ஸில் தோற்ற மீராபாய் சானு
ரியோ ஒலிம்பிக்ஸில் தோற்ற மீராபாய் சானு

21 வயதில் பங்கேற்ற முதல் ஒலிம்பிக்ஸில் 48 கிலோவுக்கான போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் முன்னிலை பெறவில்லை. 82 கிலோ தான் தூக்கினார். கிளீன் & ஜெர்க் பிரிவில் அவரால் 104, 106 கிலோ எடைகளைத் தூக்கவே முடியவில்லை. ஒலிம்பிக் மேடையில் மூன்று முறை தோல்வி கிடைத்தது. ஏமாற்றம், வேதனை, கண்ணீர். இதற்காக நான் எவ்வளவு பாடுபட்டிருப்பேன். இனிமேல் விளையாட்டே வேண்டாம், இந்த அவமானங்களும் வேண்டாம், நான் இதற்குத் தகுதியில்லாதவள் என அவருடைய மனம் என்னென்னவோ சொல்லி வேதனைப்பட்டது. 

சாய் விளையாட்டு அமைப்பின் உளவியல் நிபுணர்களிடம் பேசியபோது விடை கிடைத்தது. இது உன் முதல் ஒலிம்பிக் போட்டி. அது தந்த அழுத்தத்தை உன்னால் தாங்க முடியவில்லை. அடுத முறை அந்த அழுத்தம் இருக்காது அல்லவா, ரியோவில் விட்டதை டோக்கியோவில் பிடிப்போம் என மனத்துக்குள் சபதம் போட்டுக்கொண்டார். 

அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர் வீட்டுக்குச் செல்லவேயில்லை. அதாவது அதிகபட்சமாக ஐந்து நாள்கள் வீட்டில் இருந்திருந்தால் அதிகம். இன்னொருமுறை ஒலிம்பிக் போட்டியிலிருந்து அழுதுகொண்டு திரும்பக் கூடாது என முடிவெடுத்து, திட்டமிட்டு, ஒரு வெறியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டார். 

அதேபோல தன்னுடைய பிரச்னை மன அழுத்தம் மட்டுமல்ல, சரியான பயிற்சியுடன் திறமையில் முன்னேற்றம் இருந்திருந்தால் ரியோவில்  வெறுங்கையுடன் திரும்பியிருக்க மாட்டேன் என்று தெளிவானார். இதனால் பயிற்சிகளில் மாற்றம் கொண்டுவந்தார். பயிற்சியாளர்களுடன் தொடர்ந்து விவாதித்து, தன்னிடமிருந்த பலவீனங்களைப் போக்கினார். உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்தினார். ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லும் வீராங்கனையாகத் தன்னை எண்ணிக்கொண்டு அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார். கிளீன் & ஜெர்க் பிரிவில் கடுமையாக உழைத்து முன்னேற்றம் கண்டார். (டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு அமெரிக்காவுக்குச் சென்று பயிற்சிகளில் ஈடுபட்டார்.)

கேல் ரத்னா விருது
கேல் ரத்னா விருது

2017 முதல் வரிசையாகக் கலந்துகொண்ட 4 சர்வதேசப் போட்டிகளில் முதலிடம் வந்தார். ரியோவிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு வரை கலந்துகொண்ட 9 போட்டிகளில் 6 போட்டிகளில் முதலிடம் தான். காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவில்லை. ரியோவில் நிகழ்ந்தது போல எங்கும் கிளீன் & ஜெர்க் பிரிவில் எடையைத் தூக்க முடியாமல் அவதிப்படவில்லை. அதை விடவும் டோக்கியோவுக்கு வரும்போது கிளீன் & ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடையை தூக்கி உலக சாதனையாளராகவும் இருந்தார். (அதற்கு முன்பு 118 கிலோ உலக சாதனையாக இருந்தது.) 2017-ல் உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். மல்லேஸ்வரிக்குப் பிறகு அப்போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை. இப்படி எல்லாவிதத்திலும் ஒலிம்பிக் போட்டிக்காகத் தன்னைச் சரியான முறையில் தகுதிபடுத்திக் கொண்டார்.

2020-ல் தாஷ்கெண்டில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவ்வளவு எளிதாக உலக சாதனை நிகழ்த்திவிடவில்லை. ஸ்னாட்ச் பிரிவில் இருமுறை 85 கிலோ எடையைத் தூக்க முயன்றும் தோல்வியே கிடைத்தது. காரணம், கரோனா ஊரடங்கு காரணமாகச் சரியாகப் பயிற்சி எடுக்கவில்லை. கடைசி முயற்சியில் 86 கிலோ எடையைத் தூக்கினார். மோசமில்லை. அப்போது அவர் 4-ம் இடம் தான் பிடித்திருந்தார். பிறகு கிளீன் & ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடையைத் தூக்கி உலக சாதனை நிகழ்த்தினார். மொத்தமாக 205 கிலோவுடன் (இது தேசிய சாதனை, அதற்கு முன்பு 88+115 என 203 கிலோ எடையைத் தான் மீராபாய் தூக்கியிருந்தார்.) வெண்கலம் வென்றார், உலக சாதனையாளர் என்கிற பெருமையுடன். இதனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கு பெறுவதற்கும் தகுதி பெற்றார். இந்தியர் ஒருவர் பளு தூக்குதல் போட்டியில் உலக சாதனை நிகழ்த்துவது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. மேலும் ஸ்னாட்ச் பிரிவில், தான் இன்னும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை இந்தப் போட்டி தெளிவுபடுத்தியது. 

மேரி கோமுடன் மீராபாய் சானு
மேரி கோமுடன் மீராபாய் சானு

டோக்கியோவில் ஒரே ஒரு கேள்வி தான் இருந்தது. ஸ்னாட்ச் பிரிவில் எடையைச் சரியாகத் தூக்கிவிட்டால், பதக்கம் உறுதி. கிளீன் & ஜெர்க் பிரிவில் தான் உலகச் சாதனை கைவசம் உள்ளதே!

டோக்கியோவில் ஸ்னாட்ச் பிரிவில் சொதப்பி விட்டால் இன்னொருமுறை பதக்கமின்றி திரும்ப வேண்டியதுதான். முதலில் 84 கிலோ எடையைத் தூக்க வேண்டும். முதல் ஒலிம்பிக்ஸ் தோல்வி அப்போது நினைவில் வராமல் இருக்குமா? அவ்வளவு எளிதா அது? மேலும் போட்டிக்கு ஒருநாள் முன்பு மீராபாய்க்கு மாதவிடாய் ஏற்பட்டது. இதனால் உடலளவில் அவர் முழு உடற்தகுதியுடன் இல்லாமல் இருந்தார். என்ன ஆகுமோ, பதக்கக் கனவு தகர்ந்துவிடுமா எனப் பயந்தார். பிறகு, எதுவானாலும் துணிந்து போராடுவோம் என மன உறுதி கொண்டார்.

போட்டி தினத்தன்று மறக்காமல் அம்மா 5 வருடங்களுக்கு முன்பு கொடுத்த ஒலிம்பிக் வளையத் தங்கக் கம்மல்களை அணிந்துகொண்டார். அம்மா சொன்னது இன்றைக்கு நடக்கட்டும் என எண்ணிக்கொண்டார். களத்துக்குச் செல்லும்முன்பு விடியோ கால் வழியாகப் பெற்றோரிடம் ஆசி பெற்றுக்கொண்டார். அவர் வீட்டில் ஒரே உறவினர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டம். வீட்டுக்கு வெளியே தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டு அனைவரும் ஆசையுடன் போட்டியைப் பார்த்தார்கள். 

முதலில் 84 கிலோ எடையைத் தூக்கினார் மீராபாய். அடுத்ததாக 87 கிலோ எடையும் சாத்தியமானது. 2017-க்குப் பிறகு ஸ்னாட்ச் பிரிவில் இரு வெற்றிகள். சர்வதேசப் போட்டியில் இதுவே அவருடைய சிறந்த முயற்சி. அடுத்ததாக 89 கிலோ, முடியவில்லை. அதனால் என்ன? ஸ்னாட்சில் தோல்வி இல்லை. ஸ்னாட்ச் முடிவில் 2-ம் இடம். கிளீன் & ஜெர்க் பேட்டையில் மீராபாய் தாதா என்பதால் அப்போதே அவருடைய ஒலிம்பிக் பதக்கம் உறுதியானது.

ரியோவில் தூக்க முயன்ற எடையின் அளவை விடவும் முதல் முயற்சியில் அதிக எடையைத் தூக்கவேண்டும். ஆனால் ரியோவுக்கும் டோக்கியோவுக்குமான 5 வருடக் காலகட்டத்தில் எத்தனை மாற்றங்கள், எத்தனை வியர்வைகள், எத்தனை முயற்சிகள், எத்தனை வெற்றிகள். அக்கணத்தில் தன்னுடைய முன்னேற்றத்தை நினைத்துப் பார்த்து நிச்சயம் சில நொடிகள் சிலிர்த்திருப்பார். ரியோவில் வெண்கலம் வென்றிருந்தால் கூட இத்தனையும் நடந்திருக்காது. தோல்வி கற்றுத் தரும் பாடம் ஒரு மனிதனை வெகு உயரத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். 

கிளீன் & ஜெர்க் பிரிவில் முதலில் 110 கிலோ எடையைத் தூக்கிவிட்டார் மீராபாய். (ரியோவில் 104, 106 கிலோ எடைகளைத் தூக்க முடியாமல் தோற்றார்.) இது மீராபாய்க்கு ஒலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்தது.

அடுத்ததாக 115 கிலோ எடையையும் தூக்கினார். தங்கம் வேண்டுமென்றால் 123 கிலோ எடையைத் தூக்க வேண்டும். 119 கிலோ எடை தூக்கித்தானே உலக சாதனை படைத்தார்! அதனால் தங்கம் வெல்ல வாய்ப்பில்லாததால் ஒலிம்பிக் சாதனைக்காக 117 கிலோவை முயன்றார். அந்த எடையைக் கிட்டத்தட்ட தூக்கிவிட்டார். இருந்தாலும் கடைசிக்கட்டத்தில் பாரம் தாங்காமல் கீழே போட்டார். அவர் உடல் எடையை விட இரண்டரை மடங்கு! அதைத் தூக்கியிருந்தால் ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்திருப்பார். முடியவில்லை. அதனால் என்ன, அப்போதே 202 கிலோ எடையைத் தூக்கிய காரணத்துக்காக வெள்ளிப் பதக்கம் உறுதியானது. மகிழ்ச்சியுடன் மேடையை விட்டு இறங்கினார் மீராபாய். பளு தூக்குதலில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையையும் பெற்றார். சீனாவின் ஹோ ஷுஹுய் 210 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.

மீராபாயின் அடுத்தக் கனவு - தங்கம் வெல்வது. டோக்கியோவில் ஸ்னாட்ச், கிளீன் & ஜெர்க், மொத்தம் என மூன்றிலும் ஒலிம்பிக் சாதனைகளை நிகழ்த்தினார் சீனாவின் ஹோ ஷுஹுய். பலமுறை அவரைத் தோற்கடிக்க முயன்றேன். முடிவில்லை. ஆனாலும் சீன வீராங்கனையை வென்று ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்ல வேண்டும் என்கிறார். 

*

மீராபாய் சானுவின் சாதனையால் ஊக்கம் கொண்ட சிறுமி ஒருவர், அவரைப் போலவே எடையைத் தூக்கும் அழகான விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிகப் பாராட்டுகளைப் பெற்றது. 

சிறுமியின் பின்னால் மீராபாய் சானுவின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் காணொளி, தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தக் காணொளியை அவ்வப்போது பார்த்தபடி எடையைத் தூக்க முயலும் சிறுமி, முதலில் மீராபாய் சானுவைப் போலவே பவுடரைக் கைகளால் தட்டி, பிறகு சிறிய அளவிலான எடையைத் தூக்கி, அவரைப் போலவே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதைப் பகிர்ந்தார். இதை மீராபாய் சானுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மிக அழகாக உள்ளது. நான் மிகவும் ரசித்தேன் எனப் பாராட்டினார். 


வெள்ளி வென்ற தருணத்தில் தொலைக்காட்சியில் மகளின் வெற்றியைப் பார்த்த மீராபாயின் தாய்க்கும் தந்தைக்கும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எத்தனை எத்தனை தியாகங்களுக்குப் பிறகு கிடைத்த பொக்கிஷம் அது என்று அவர்கள் அறியாமல் இருப்பார்களா? மீராபாயைத் தொலைக்காட்சியிலும் யூடியூப் காணொளியிலும் பார்த்தவர்கள் அந்தத் தங்கக் கம்மலைக் கவனிக்காமல் இல்லை. இம்முறை அது கூடுதல் ஒளியைப் பாய்ச்சியது அவருடைய பெற்றோருக்கே தெரிந்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com