இந்திய டெஸ்ட் அணியில் உம்ரான் மாலிக்: பீட்டர்சென் வலியுறுத்தல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 150 கி.மீ. வேகத்துக்கு மேல் பந்துவீசி வரும் உம்ரான் மாலிக்கை பிசிசிஐ உடனடியாக டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின்
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 150 கி.மீ. வேகத்துக்கு மேல் பந்துவீசி வரும் உம்ரான் மாலிக்கை பிசிசிஐ உடனடியாக டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சென் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் 'காஷ்மீர் புயல்' உம்ரான் மாலிக் தனது பந்துவீச்சு வேகத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தொடர்ச்சியாக 150 கி.மீ. வேகத்துக்கு மேல் பந்துவீசி வந்த அவர் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 154 கி.மீ. வேகத்தில் பந்துவீசினார். இதையடுத்து, விரைவில் 155 கி.மீ. வேகத்துக்கு மேல் பந்துவீசுவேன் என்றும் கூறினார்.

சொன்னபடி டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 155 கி.மீ. வேகத்தைத் தாண்டி 157 கி.மீ. வேகத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த வேகத்தால் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனும் ஈர்க்கப்பட்டுள்ளார். 

உம்ரான் மாலிக் குறித்து பீட்டர்சென் கூறியதாவது:

"இப்படியொரு துணிச்சல் மிகுந்த திறமையான வீரரைப் பார்ப்பது அற்புதமாக உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டேல் ஸ்டெயின் எனும் மிகச் சரியான ஆலோசகர் அவருக்கு இருக்கிறார். வேகப்பந்துவீச்சு குறித்து பேசுவதற்கு அவரைவிட சிறந்த வீரர் எவரும் இல்லை. என்னைப் பொறுத்தவரை காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இந்திய டெஸ்ட் அணித் தேர்வில் அவர் இருக்க வேண்டும். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணித் தேர்விலும் அவர் இடம்பெற வேண்டும். இப்படியொரு வேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். 

ஆஸ்திரேலிய அணி மிட்செல் ஜான்சனைப் பயன்படுத்தியதைப்போல இவரையும் பயன்படுத்தலாம். நான் இந்திய அணித் தேர்வாளராக இருந்தால், ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டெஸ்ட் ஆட்டத்துக்கு அவரைத் தேர்வு செய்வேன். கவுன்டி கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர்கள் தற்போது மணிக்கு 70 மைல் வேகத்தைதான் எதிர்கொள்கின்றனர். எனவே, திடீரென மணிக்கு 90-95 மைல் வேகத்தை அவர்கள் எதிர்கொள்ளமாட்டார்கள்" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com