மே.இ. தீவுகள் உலகக் கோப்பை அணியில் டி20 பிரபலங்கள் இடம்பெறாதது ஏன்?

கெய்ல், பிராவோ, பொலார்ட், ரஸ்ஸல், நரைன் என இவர்களில் ஒருவர் கூட இல்லாமல் முதல்முறையாக...
2016-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற மே.இ. தீவுகள் அணி
2016-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற மே.இ. தீவுகள் அணி

டி20 ஜாம்பவான்கள் இல்லாமல் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்கவுள்ளது மே.இ. தீவுகள் அணி

கெய்ல், பிராவோ, பொலார்ட், ரஸ்ஸல், நரைன் இல்லாத மே.இ. தீவுகள் அணியை எண்ணிப் பார்க்க முடியுமா? அதுவும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில்?

இம்முறை ஆஸ்திரேலியாவில் அப்படியொரு புதிய மே.இ. தீவுகள் அணியைத்தான் நாம் பார்க்கவுள்ளோம். இன்னும் சொல்லப் போனால் கெய்ல், பிராவோ, பொலார்ட், ரஸ்ஸல், நரைன் என இவர்களில் ஒருவர் கூட இல்லாமல் முதல்முறையாக டி20 உலகக் கோப்பை நடைபெறப் போகிறது. (2007 டி20 உலகக் கோப்பை முதல் கெயில், பிராவோ விளையாடியுள்ளார்கள்.)

உலகமெங்கும் தோன்றியுள்ள டி20 லீக் போட்டிகள் காரணமாகப் பெரிய சரிவை முதலில் சந்தித்தது மே.இ. தீவுகள் அணி தான். இல்லையென்றால் இந்த டி20 ஜாம்பவான்களை ஆஸ்திரேலியாவில் நாம் பார்த்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 பிரபலங்களான ரஸ்ஸல், சுநீல் நரைன் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 

2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பிராவோ, பொலார்ட், கெயில், ரஸ்ஸல் ஆகியோர் விளையாடினார்கள். இம்முறை இவர்கள் யாரும் மே.இ. தீவுகள் அணியில் இல்லை. 2014-க்குப் பிறகு மே.இ. தீவுகள் அணியின் எந்தவொரு டி20 உலகக் கோப்பை அணியிலும் நரைன் விளையாடவில்லை. 

இவர்கள் ஏன் யாரும் டி20 உலகக் கோப்பை அணியில் இல்லை? ஒவ்வொருவராகப் பார்க்கலாம். 

நரைன்: கடைசியாக 2019 ஆகஸ்டில் மே.இ. தீவுகள் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விளையாடவில்லை. டி20 உலகக் கோப்பை அணியில் நரைன் ஏன் இல்லை என்கிற கேள்விக்கு அவருக்கு ஆர்வம் இல்லை எனச் சொல்லிவிட்டார் என்று மே.இ. தீவுகள் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் கூறியுள்ளார். 
 
கெயில்: 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து மே.இ. தீவுகள் அணி வெளியேறியவுடன், இதுவே நான் விளையாடிய கடைசி (ஐசிசி) போட்டி என அறிவித்தார் கெயில். இன்னும் ஓய்வு அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. எனினும் 42 வயதாகி விட்டதால் இனியும் மே.இ. தீவுகள் அணிக்காக அவர் விளையாடுவது கடினம் தான்.

பொலார்ட்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார் 34 வயது ஆல்ரவுண்டர் பொலார்ட். அதிக டி20 சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் வீரரான பொலார்டை இனிமேல் டி20 லீக் போட்டிகளில் மட்டுமே காண முடியும்.

பிராவோ: 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து மே.இ. தீவுகள் அணி வெளியேறியவுடன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் பிராவோ. உடல் ஒத்துழைக்கும் வரை டி20 லீக் போட்டிகளில் விளையாடுவேன் எனக் கூறியுள்ளார்.

ரஸ்ஸல்: இவர் இன்னும் ஓய்வு பெறவில்லை. 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடாமல் டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதால் இவர் மீது அதிருப்தியில் உள்ளது கிரிக்கெட் வாரியம். இதன் காரணமாக உலகக் கோப்பைக்கு ரஸ்ஸைத் தேர்வு செய்யவில்லை. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடி இன்னும் இரு உலகக் கோப்பைகளை வெல்லவேண்டும் எனப் பிரியப்படுகிறார் ரஸ்ஸல். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: என்னுடைய நிபந்தனைகளை மே.இ. தீவுகள் அணி நிர்வாகம் மதிக்கவேண்டும். அது அப்படித்தான். எங்களுக்குக் குடும்பம் உண்டு. எங்கள் விளையாட்டு வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்னால் மீண்டும் முதலில் இருந்து விளையாட ஆரம்பிக்க முடியாது. எனக்கு வயது 34. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இரு உலகக் கோப்பைகளையாவது வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். டி20 லீகில் இரு சதங்கள் எடுத்துள்ளேன். அந்த இரு சதங்களும் மே.இ. தீவுகள் அணிக்காக எடுத்திருக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் அந்தச் சதங்கள் எடுக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார்.

காலம் மாறுகிறது. எல்லாமும் மாறுகிறது. கிரிக்கெட்டில் புதிய மாற்றங்களுடன் புதிய சவால்களுக்குத் தயாராக இருக்கிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com