
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர் விராட் கோலி, இன்னும் 207 ரன்கள் கடந்தால் புதிய சாதனையை படைக்கவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்டருமான விராட் கோலி, இதுவரை 468 சர்வதேச போட்டிகளில் விளையாடி 24,002 ரன்கள் குவித்துள்ளார். இதில், 71 சதங்களும், 124 அரைசதங்களும் அடங்கும்.
இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார் கோலி. முதல் இடத்தில் 34,357 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கரும், இரண்டாவது இடத்தில் 24,208 ரன்களுடன் ராகுல் டிராவிட்டும் உள்ளனர்.
இந்நிலையில், நாளை தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில், கோலி தனது அதிரடியை தொடரும் பட்சத்தில் 207 ரன்களை எளிதாக கடந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலிலும் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறிவிடுவார்.
சர்வதேச அரங்கில் அதிக ரன்கள்
இடம் | வீரர் பெயர் | ரன்கள் |
1 | சச்சின் | 34,357 |
2 | குமார் சங்ககரா | 28,016 |
3 | ரிக்கி பாண்டிங் | 27,483 |
4 | ஜெயவர்தனே | 25,957 |
5 | ஜேக் காலிஸ் | 25,534 |
முன்னதாக, கடந்த 1,000 நாள்களுக்கு மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வந்த விராட் கோலி ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 122 ரன்கள் குவித்து சர்வதேச அரங்கில் 71 சதத்தை எட்டினார். ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு அரைசதம், ஒரு சதத்துடன் மொத்தம் 276 ரன்கள் குவித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார் கோலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.