கேப்டன் ஜோ ரூட்: சாதனைகளும் வேதனைகளும்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு கேப்டன்கள் மட்டுமே ரூட்டை விடவும் அதிக தோல்விகளை (26) எதிர்கொண்டுள்ளார்கள்.
கேப்டன் ஜோ ரூட்: சாதனைகளும் வேதனைகளும்

இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகியுள்ளார். இந்த முடிவு யாரையும் ஆச்சர்யப்படுத்தவில்லை. தவிர்க்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. இந்தத் தோல்வி இங்கிலாந்துக்கும் ஜோ ரூட்டுக்கும் பெரிய சிக்கலாகிவிட்டது.

கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் 4-ல் தோற்ற இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 எனப் பின்தங்கியுள்ளது. வெளிநாடுகளில் விளையாடிய மூன்று தொடர்களிலும் தோற்றுள்ளது (இந்தியா, ஆஸ்திரேலியா, மே.இ. தீவுகள்). சொந்த மண்ணில் விளையாடிய இரு தொடர்களிலும் அதனால் ஜெயிக்க முடியவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து கடைசி இடத்தில் அதாவது 9-ம் இடத்தில் உள்ளது. விளையாடிய 11 டெஸ்டுகளில் ஒரு டெஸ்டில் மட்டும் வெற்றி பெற்று 7 டெஸ்டுகளில் தோற்றுள்ளது. 

இதன் காரணமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் பதவியைப் பறிக்க வேண்டும், இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன. ஆனாலும் தொடர்ந்து கேப்டனாக இருக்க ரூட் விருப்பம் தெரிவித்தார். கடைசியில் வேறுவழியின்றி ராஜிநாமா செய்துவிட்டார். 

2017-ல், குக் ராஜிநாமா செய்ததையடுத்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ரூட் நியமிக்கப்பட்டார். 2018-ல் இந்தியாவுக்கு எதிராகச் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றார். தென்னாப்பிரிக்காவில் தெ.ஆ. அணிக்கு எதிராக 2019-20-ல் டெஸ்ட் தொடரை வென்றார். இந்த இரு வெற்றிகளும் அவருடைய தலைமைப்பண்புக்கான உதாரணங்களாகக் கூறப்படுகின்றன. 

டெஸ்ட் கேப்டனாக ஜோ ரூட்டின் சாதனைகளும் வேதனைகளும்

* அதிக டெஸ்டுகளில் கேப்டனாக இருந்த இங்கிலாந்து வீரர், ஜோ ரூட். 64 டெஸ்டுகள். அதிக டெஸ்ட் வெற்றிகளையும் (27) அதிக டெஸ்ட் தோல்விகளையும் (26) கண்ட இங்கிலாந்து கேப்டனும் அவர் தான். 

* இங்கிலாந்து கேப்டன்களில் அதிக டெஸ்ட் ரன்கள் (5295), அதிக டெஸ்ட் சதங்கள் (14), அதிக டெஸ்ட் அரை சதங்கள் (26), அதிக கேட்சுகள் (87) என அனைத்திலும் ரூட்டுக்கே முதலிடம். 

* இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்டுகளில் ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு கேப்டன்கள் மட்டுமே ரூட்டை விடவும் அதிக தோல்விகளை (26) எதிர்கொண்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித் - 109 டெஸ்டுகளில் 29 தோல்வி, ஸ்டீபன் பிளெமிங் - 80 டெஸ்டுகளில் 27 தோல்வி.

* கடந்த வருடம் ஆறு சதங்களுடன் 1708 ரன்கள் எடுத்தார் ரூட். ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த இங்கிலாந்து வீரர் என்கிற பெருமையை அடைந்தார். 

* ஆஷஸ் தொடர் வெற்றியைக் காணாத இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். நூறு வருடங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் இரு ஆஷஸ் தொடர்களின் தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்த ஒரே இங்கிலாந்து கேப்டன். 2017-18, 2020-21 என இருமுறை ஆஸ்திரேலியாவில் 0-4 எனத் தோற்றுள்ளது ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி. 

* சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கொண்ட 2-வது இங்கிலாந்து கேப்டன் - ரூட். 31 டெஸ்டுகளில் 17 வெற்றிகள். முதல் இடத்தில் ஸ்டிராஸ், 31 டெஸ்டுகளில் 19 வெற்றிகள். 

* வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் தோல்விகளைக் கண்ட கேப்டன்களில் ரூட்டும் ஒருவர். பிரையன் லாரா, தென்னாப்பிரிக்காவிலும் ( 9 டெஸ்டுகள்) ரூட் ஆஸ்திரேலியாவிலும் (10 டெஸ்டுகள்) 8 டெஸ்ட் தோல்விகளைச் சந்தித்துள்ளார்கள். ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்டில் கூட ரூட் ஜெயித்ததில்லை. 

* டெஸ்ட் கேப்டன்களில் அதிக ரன்களை எடுத்தவர்களில் ரூட்டுக்கு 5-ம் இடம். 5295 ரன்கள், சராசரி - 46.44. ஆனால் கேப்டனாக இல்லாதபோது அவருடைய டெஸ்ட் ரன்கள் சராசரி - 52.80. 

கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து அணி

இந்தியாவிடம் தோல்வி (1-3)
நியூசிலாந்திடம் தோல்வி (0-1)
இந்தியாவிடம் பின்தங்கியுள்ளது (1-2)
ஆஸ்திரேலியாவிடம் தோல்வி (0-4)
மே.இ. தீவுகளிடம் தோல்வி (0-1)

ஏழு வாரங்கள் கழித்து லார்ட்ஸில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் புதிய கேப்டனுடன் களமிறங்கவுள்ளது இங்கிலாந்து அணி. இதன் வழியாக மறுமலர்ச்சிக்குக் காத்திருக்கிறார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com