2-வது டி20: சோதனை முயற்சியில் தோல்வியடைந்த ரோஹித் சர்மா
By DIN | Published On : 02nd August 2022 11:03 AM | Last Updated : 02nd August 2022 11:03 AM | அ+அ அ- |

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 27 ரன்கள் எடுத்தார். மே.இ. தீவுகள் அணியின் ஒபட் மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். மே.இ. தீவுகள் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிராண்டன் கிங் 68 ரன்கள் எடுத்தார்.
இந்த ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் 2 ஓவர்களை மட்டுமே வீசினார். கடைசி 5 ஓவர்களில் 4 ஓவர்களை அவேஷ் கானும் அர்ஷ்தீப் சிங்கும் வீசினார்கள். 3-வது ஓவருக்குப் பிறகு புவனேஸ்வர் குமார் பந்துவீசவே வரவில்லை. கடைசி ஓவரில் மே.இ. தீவுகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது அவேஷ் கான் அந்த ஓவரை வீசினார். நோ பால் வீசி ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் கொடுத்து தனது முயற்சியில் தோற்றார். இதனால் ரோஹித் சர்மா விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
இதுபற்றி ரோஹித் சர்மா கூறியதாவது: இளம் வீரர்களுக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும். புவனேஸ்வர் குமாரால் என்ன செய்யமுடியும் என நமக்குத் தெரியும். ஆனால் அர்ஷ்தீப் சிங்குக்கும் அவேஷ் கானுக்கும் வாய்ப்பு தராவிட்டால் கடைசி ஓவரில் அவர்கள் எப்படிப் பந்துவீசுவார்கள் என்பது நமக்குத் தெரியாமலே போய்விடும். அவர்களுக்கு வாய்ப்பும் ஆதரவும் அளிக்கப்படவேண்டும் என்றார்.