வெளியேறும் ராணிகள்: செஸ் விளையாட்டில் நிலவும் பாலின ஏற்றத்தாழ்வு!

செஸ் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பு 2% மட்டுமே.
வெளியேறும் ராணிகள்: செஸ் விளையாட்டில் நிலவும் பாலின ஏற்றத்தாழ்வு!

செஸ் பலகையில் ராணி தான் சக்திமிக்கது. அதுதான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். எதிராளியின் ராஜாவைக் கைப்பற்றினால் தான் வெற்றி பெற முடியும என்றாலும் ராணி இல்லாவிட்டால் கையொடிந்த நிலை தான். மீள்வது கடினம்.

செஸ் விளையாட்டில் ராணிகளின் பங்களிப்பு எப்படி உள்ளது? செஸ் விளையாட்டில் நிலவும் பாலின ஏற்றத்தாழ்வு மிகவும் வேதனையளிக்கும் விதமாகவே உள்ளது. 

மற்ற விளையாட்டுகளைப் போல் இல்லாமல் செஸ்ஸில் ஆணும் பெண்ணும் சரிசமாக மோதமுடியும். அதனால் தான் செஸ் ஒலிம்பியாடில் ஓபன், மகளிர் எனப் பிரிவுகள் உள்ளன. ஓபன் பிரிவில் பெண்களும் விளையாடலாம். ஆனால் சென்னை செஸ் ஒலிம்பியாடில் ஓபன் பிரிவில் 13 பெண்கள் மட்டுமே விளையாடுகிறார்கள். அவர்களிலும் சிலர் மட்டுமே 2500 தரவரிசைப் புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ளார்கள். 

சர்வதேச ஒலிம்பிக் குழுவில் இணைந்துள்ள விளையாட்டுச் சங்கங்களில் சர்வதேச செஸ் சம்மேளனத்தில் (FIDE) பெண்களின் பங்களிப்பு மோசமான நிலையில் உள்ளது. ஈஎல்ஓ தரவரிசை கொண்ட வீரர்களில் பெண்கள் 11% மட்டுமே. செஸ் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பு 2% மட்டுமே. தரவரிசையில் உள்ள முதல் 100 வீரர்களில் ஒரு பெண் மட்டுமே இடம்பெற்றுள்ளார். செஸ் போன்ற சில விளையாட்டுகளில் மட்டுமே உலக சாம்பியனை முடிவு செய்யும் போட்டியில் ஆண், பெண் என இருவரும் சம அளவில் கலந்துகொள்ள முடியும். எனினும் இதுவரை ஒரு பெண் கூட உலக செஸ் சாம்பியனாக ஆனதில்லை. 

உலகம் முழுக்க செஸ் விளையாடும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆண்கள் போல பெண்களுக்கு இது சுலபமானதல்ல. பல மாதங்கள், வருடங்களாக ஆண்களால் பயணம் செய்ய முடியும். வீட்டை விட்டு நீண்ட நாள் வெளியே தங்குவது பெண்களுக்குச் சுலபமல்ல. இதனால் தான் பதின்ம வயதுக்கு முன்பே செஸ்ஸை விட்டு பெண்கள் வெளியேறிவிடுகிறார்கள். இதுதான் காரணம் எனும்போது, பெண்களை விடவும் ஆண்கள் அதிகளவில் செஸ் விளையாடுகிறார்கள் என்பது இயல்புதானே என்கிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீராங்கனை ஹம்பி. செஸ் தரவரிசையில் 2500 தரவரிசைப் புள்ளிகளைக் கொண்ட 770 பேரில் 13 பேர் மட்டுமே பெண்கள் என்பது கசப்பான உண்மையாக உள்ளது. 

பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளதற்கு உளவியல் காரணமும் கூறப்படுகிறது. 42 ஆண் - பெண் ஜோடிகள் இணையம் வழியாக செஸ் விளையாட்டில் பங்கேற்றார்கள். எதிராளியின் பாலினம் தெரியாதபோது ஆண்களுக்கு நிகராகப் பெண்களால் விளையாட முடிந்துள்ளது. சக பெண்களுடன் விளையாடுவதாகவே அவர்கள் எண்ணிக்கொண்டு நன்றாகவே விளையாடியுள்ளார்கள். ஆனால் எதிரே விளையாடுபவர் ஆண் எனத் தெரிந்த பிறகு பெண்களின் ஆட்டத்திறமை குறைந்துபோனதாக ஓர் ஆய்வு கூறுகிறது. மேலும் பெண்களுக்கு எதிராக விளையாடும்போது ஆண்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாகவும் அழகான பெண்களுக்கு எதிராக விளையாடும்போது சவாலான தொடக்க நகர்த்தல்களில் ஆண்கள் ஈடுபடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

செஸ் ஜாம்பவான்களான பாபி ஃபிஷர், கேரி காஸ்பரோவ்  ஆகியோர் செஸ் வீராங்கனைகளுக்கு எதிரான கருத்துகளைக் கூறியுள்ளார்கள். பெண்கள் வீட்டில் இருக்கவேண்டும் என காஸ்பரோவும் பெண்கள் பலவீனமான போட்டியாளர்கள் என்று பாபி ஃபிஷர் கூறியதும் பெண்களின் குறைவான பங்களிப்புக்கு ஒரு காரணமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

செஸ்ஸில் 2700 தரவரிசைப் புள்ளிகளைத் தாண்டிய ஒரே வீராங்கனை ஜுடித் போல்கர். கார்ல்சன் உள்பட 10 உலக சாம்பியன்களையாவது கிளாசிகல், ரேபிட் செஸ் போட்டிகளில் அவர் தோற்கடித்திருப்பார். பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த எந்த கருத்துகளும் அவருக்குப் பொருந்தாது. காரணம், அவரைப் பெற்றோர் வளர்த்த விதம். எந்தக் கட்டுப்பாடும் இன்றி என்னை என் பெற்றோர் வளர்த்தார்கள். எங்களுக்கு ஒரு மகன் இருந்தால் என்னென்ன சூழல்களை அவனுக்கு உருவாக்கியிருப்போமோ அதையே உனக்கும் ஏற்படுத்தித் தருகிறோம். எனவே செஸ் விளையாட்டில் ஓபன் பிரிவில் நன்றாக விளையாடுவதற்கான எல்லாச் சூழல்களும் உனக்கு அமைந்துள்ளன என்று என் பெற்றோர் கூறினார்கள். என்னை அவர்கள் கட்டுப்படுத்தவே இல்லை என்றார். சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் போல்கர் வர்ணனையாளராக உள்ளார். அவர் பெண்கள் பிரிவில் உலக சாம்பியனாக ஆனதே இல்லை. காரணம், அவர் எப்போதும் ஆண்களுக்கு எதிராக விளையாட வேண்டும் என முடிவெடித்துப் போட்டியிட்டுள்ளார்.

பரிசுத்தொகையிலும் பாகுபாடு இருப்பது வீராங்கனைகளுக்கு வேதனையளிக்கிறது. 2020-ல் மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற சீன வீராங்கனைக்கு அளிக்கப்பட்ட பரிசுத்தொகை - ரூ. 3,00,000 யூரோக்கள். 2021 உலக சாம்பியனான கார்ல்சன் பெற்றது, 1.2 மில்லியன் யூரோக்கள்.  

52 வயது விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச செஸ் சம்மேளனத்தின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார். போல்கரிடம் தோற்ற உலக சாம்பியன்களில் ஆனந்தும் ஒருவர். செஸ் விளையாட்டில் குறையும் பெண்களின் பங்களிப்பு பற்றி ஆனந்த் கூறியதாவது: குறிப்பாக என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியவில்லை. மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகள் அவசியம். இல்லாவிட்டால் ஓபன் பிரிவில் போட்டியிட குறைவான பெண்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். இரு பிரிவிலும் உள்ள இடைவெளி விரைவில் குறையும். பெண்கள் அதிக அளவில் செஸ் விளையாட்டில் ஈடுபடுவதை நாம் உறுதி செய்யவேண்டும். சென்னை செஸ் ஒலிம்பியாடில் ஹம்பி அல்லது ஹரிகா என இருவரில் ஒருவர் ஓபன் போட்டியில் விளையாடியிருக்கலாம். அதேசமயம் பெண்கள் பிரிவிலும் நமக்குப் பதக்கம் அவசியம். அதனால் வலுவான பெண்கள் அணி தேவை என்றார். 

தற்போதைய நிலைமை மாற வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பு. ராணிகள் செஸ் பலகைக்கு வெளியேயும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அந்த நாள் நிச்சயம் வரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com