மிரட்டிய சுழற்பந்துவீச்சாளர்கள்: கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 
மிரட்டிய சுழற்பந்துவீச்சாளர்கள்: கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி லாடர்ஹில் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றனர். ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தினார். இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினர். இஷான் கிஷன் 13 பந்துகளில் 11 ரன்கள் குவித்து வெளியேறினார். 

அதன்பின் தீபக் ஹூடா களம் கண்டார். ஸ்ரேயஸ் மற்றும் தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் 40 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததையடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை விளையாடிக் கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. பின் வரிசை வீரர்களில் சஞ்சு சாம்சன் 15 ரன்கள், தினேஷ் கார்த்திக் 12 ரன்கள், ஹர்திக் பாண்டியா 28 ரன்கள், அக்‌ஷர் படேல் 9 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. அவேஷ் கான் 1, குல்தீப் யாதவ் 0 ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்த அணி 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஹெட்மயர் 56 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்களை கைப்பற்றினார். அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com