காமன்வெல்த் மகளிர் டி20 இறுதிச்சுற்றில் ஏற்பட்ட பெரிய சர்ச்சை

ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு ஆளாகும்போது...
காமன்வெல்த் மகளிர் டி20 இறுதிச்சுற்றில் ஏற்பட்ட பெரிய சர்ச்சை

இந்தியாவுக்கு எதிரான காமன்வெல்த் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளது.

பிர்மிங்கமில் நடைபெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸி. அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை பெத் மூனி 61 ரன்கள் எடுத்தார். இந்திய அணி நன்கு பேட்டிங் செய்தும் கடைசிக்கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியடைந்தது. 15-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்த இந்திய மகளிர் அணி, 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 65 ரன்களும் ஜெமிமா 33 ரன்களும் எடுத்தார்கள். கார்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   

இந்த ஆட்டத்தில் ஆஸி. வீராங்கனை தஹிலா மெக்ராத், கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

லேசான அறிகுறிகளுடன் இருந்த தஹிலா மெக்ராத், பரிசோதனை மேற்கொண்டதில் கரோனாவால் அவர் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இறுதிச்சுற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு இத்தகவல் தெரிய வந்தாலும் ஆஸ்திரேலிய அணியின் 11 பேரில் ஒருவராக அவர் இடம்பெற்றார். மெக்ராத்தின் பங்கேற்புக்கு ஐசிசியும் அனுமதியளித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர் ஒருவர் ஆட்டத்தில் பங்கேற்றது இதுவே முதல்முறை. லேசான அறிகுறிகளுடன் இருந்ததால் இங்கிலாந்து நாட்டின் விதிமுறைகளின்படி மெக்ராத் விளையாட அனுமதிக்கப்பட்டார். டாஸ் நிகழ்வுக்கு முன்பு இந்திய அணியினரிடம் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் கரோனா பாதிப்புடன் மெக்ராத் விளையாடியது சமூகவலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு ஆளாகும்போது கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிந்தும் அவரை அணியில் சேர்த்துக்கொண்ட ஆஸி. அணிக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இறுதிச்சுற்றில் பேட்டிங்கில் 4-ம் நிலை வீராங்கனையாக களமிறங்கிய மெக்ராத், 2 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்தார். 

தஹிலா மெக்ராத்
தஹிலா மெக்ராத்

இந்தச் சர்ச்சை பற்றி இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்ட மெக்ராத் விளையாடுவது பற்றி டாஸுக்கு முன்பு எங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. காமன்வெல்த் நிர்வாகம் இந்த முடிவை எடுத்தது. எங்களுக்கும் இதில் பிரச்னை எதுவும் இல்லை. அவர் பெரிதாக உடல்நலம் பாதிக்கப்படவில்லை. எனவே இறுதிச்சுற்றில் விளையாட நாங்கள் முடிவெடுத்தோம். அத்தருணத்தில் விளையாட்டு வீரர்களுக்குரிய நட்புணர்வை வெளிப்படுத்த எண்ணினோம். மெக்ராத் விளையாடக் கூடாது என நாங்கள் சொல்லாததற்கு மகிழ்ச்சியடைகிறோம். இறுதிச்சுற்றில் விளையாடாமல் இருப்பது ஏற்க முடியாத ஒன்றாக அவருக்கு இருந்திருக்கும் என்றார். 

காமன்வெல்த் போட்டிகளின் இறுதிச்சுற்றில் விளையாடிய தஹிலா மெக்ராத், இந்திய பேட்டர் ஷெஃபாலியின் கேட்சைப் பிடித்தார். எனினும் சக வீராங்கனைகளுடன் இணைந்து அந்த மகிழ்ச்சியை பெரிதளவில் அவர் கொண்டாடவில்லை. அதேபோல எல்லைக்கோட்டுக்கு வெளியே முகக்கவசம் அணிந்து அணி வீராங்கனைகளுடன் சேராமல் தனியே அமர்ந்திருந்தார். ஆனால் ஆஸி. அணி ஆட்டத்தில் வென்ற பிறகு முகக்கவசம் அணிந்தபடி வீராங்கனைகளுடன் இணைந்து அத்தருணத்தைக் கொண்டாடி மகிழ்ந்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com