ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை எளிதில் கைப்பற்றிய இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை எளிதில் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை எளிதில் கைப்பற்றிய இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை எளிதில் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

ஹராரேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இன்று (ஆகஸ்ட் 20) ஹராரேவில் நடைபெறும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தீபக் சஹாருக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் இடம் பெற்றார். ஜிம்பாப்வே அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. 

முதல் ஒருநாள் ஆட்டம் போலவே 2-வது ஒருநாள் ஆட்டத்திலும் ஜிம்பாப்வே பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள். முதல் 4 விக்கெட்டுகளை 31 ரன்களுக்கு இழந்தது.  21 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. 

ஜிம்பாப்வே அணியின் பின்நடுவரிசை பேட்டர்களான சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும் ரையன் பர்ல் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்து ஓரளவு நிலைமையைச் சமாளித்தார்கள். ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியப் பந்துவீச்சாளர்களில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்கினர். கேப்டன் கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார் ஷுப்மன் கில். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரினை உயர்த்தினர். ஷிகர் தவான் மற்றும் கில் தலா 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் 6 ரன்களில் விக்கெட்டினை பறிகொடுத்தார்.

பின்னர் தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. தீபக் ஹூடா 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சஞ்சு சாம்சன் 43 ரன்களுடனும், அக்ஸர் படேல் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com