மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி
மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமனில் இருந்த நிலையில் 3-வது ஒருநாள் ஆட்டம், பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, நன்கு விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 105 ரன்களும் கேப்டன் நிகோலஸ் பூரன் 91 ரன்களும் தொடக்க வீரர் ஷாய் ஹோப் 51 ரன்களும் எடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்பும் கைல் மேயர்ஸும் 173 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தார்கள். முதல் விக்கெட் இழந்த பிறகு ஓரளவு தடுமாறினாலும் கடைசி 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்கள் மே.இ. தீவுகள் பேட்டர்கள்.
நியூசிலாந்து அணி இலக்கை அபாரமாக விரட்டி 47.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்து 3-வது ஒருநாள் ஆட்டத்தையும் ஒருநாள் தொடரையும் வென்றது. மார்டின் கப்தில் 57, கான்வே 56, டாம் லதம் 69, டேரில் மிட்செல் 63, ஜேம்ஸ் நீஷம் 11 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்தார்கள். ஆட்ட நாயகன் விருதை டாம் லதமும் தொடர் நாயகன் விருதை மிட்செல் சான்ட்னரும் வென்றார்கள்.
மேற்கிந்தியத் தீவுகளில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றுள்ளது நியூசிலாந்து அணி.
ஒருநாள் தொடர்: மேற்கிந்தியத் தீவுகளில் நியூசிலாந்து அணி
1985 - 0-5 எனத் தோல்வி
1996 - 2-3 எனத் தோல்வி
2002 - 1-3 எனத் தோல்வி
2012 - 1-4 எனத் தோல்வி
2022 - 2-1 என வெற்றி