கார்ல்சனை 3-வது முறையாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

புள்ளிகள் அடிப்படையில் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியை வென்றுள்ளார் கார்ல்சன்.
கார்ல்சனை 3-வது முறையாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

உலக சாம்பியன் கார்ல்சன் புள்ளிகள் அடிப்படையில் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியை வென்றுள்ளார். கடைசிச் சுற்றில் கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா வென்றார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற (ரேபிட் முறையிலான) எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடினார் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் பிரபல வீரர் அனிஷ் கிரியை 2.5-1.5 என வீழ்த்தினார். 3-வது சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தபோதும் மீண்டு வந்து 2.5-1.5 என ஹான்ஸ் நீமன்னை வீழ்த்தினார். 4-வது சுற்றில் பிரபல வீரர் லெவோன் ஆரோனியனை  3-1 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. 5-வது சுற்றில் 2.5-0.5 என லியம் லீயுடன் மோதித் தோற்றார். டுடாவுக்கு எதிரான 6-வது சுற்றில் டை பிரேக்கரில் தோற்றார் பிரக்ஞானந்தா. 

இந்நிலையில் கடைசிச் சுற்றில் கார்ல்சனுடன் மோதினார் பிரக்ஞானந்தா. ரேபிட் ஆட்டங்களிலேயே பிரக்ஞானந்தா வென்றால் தான் போட்டியை அவரால் வெல்ல முடியும் என்கிற நிலை இருந்தது. ஒருவேளை 4 ரேபிட் ஆட்டங்களின் முடிவில் இருவரும் சமநிலையில் இருந்தால் கார்ல்சன் போட்டியை வென்றவராக அறிவிக்கப்படுவார், அதன்பிறகு பிளிட்ஸ் முறையில் நடைபெறும் டை பிரேக்கரில் பிரக்ஞானந்தா வென்றாலும் பயனில்லை என்கிற நிலையில் தான் இருவரும் கடைசி சுற்றில் மோதினார்கள். 

முதல் இரு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தன. 3-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவை கார்ல்சன் வென்றபோது போட்டியின் முடிவு உறுதியானது. அடுத்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வென்றதால் இருவரும் 2-2 என சமனில் இருந்தார்கள். டை பிரேக்கரில் இரு ஆட்டங்களிலும் பிரக்ஞானந்தா வென்றார். இறுதிச்சுற்றில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினாலும் புள்ளிகளின் அடிப்படையில் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பையை வென்றார் கார்ல்சன். பிரக்ஞானந்தாவுக்கு 2-ம் இடம் கிடைத்தது.

கடைசியாக கார்ல்சனுடன் மோதிய 3 ஆட்டங்களிலும் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இணையம் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 8-வது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார் பிரக்ஞானந்தா. மே மாதம், செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியிலும் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார். தற்போது, எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியிலும் வீழ்த்தித் தொடர்ச்சியாக கார்ல்சனை மூன்று முறை வீழ்த்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com