பிரக்ஞானந்தாவின் தோல்விக்குக் கண்ணீர் விட்ட பிரபல செஸ் வீரர்: பயிற்சியாளர் உருக்கம்!

உண்மையான அக்கறை அது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அன்பும் ஆதரவும் அளிக்கும் மனிதர்களை...
படம்:  chess24 யூடியூப் தளத்தின் ஸ்கிரீன் ஷாட்
படம்: chess24 யூடியூப் தளத்தின் ஸ்கிரீன் ஷாட்

கிரிப்டோ செஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவின் தோல்விக்குக் கண்ணீர் விட்ட பிரபல செஸ் வீரர் பீட்டர் லேகோ குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார் பிரபல பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற (ரேபிட் முறையிலான) எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடினார் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது செஸ் வீரர் பிரக்ஞானந்தா. கடைசிச் சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனுடன் மோதினார். நான்கு ரேபிட் சுற்றுகளின் முடிவில் இருவரும் 2-2 என சமனில் இருந்தார்கள். டை பிரேக்கரில் இரு ஆட்டங்களிலும் பிரக்ஞானந்தா வென்றார். இறுதிச்சுற்றில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினாலும் புள்ளிகளின் அடிப்படையில் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பையை வென்றார் கார்ல்சன். பிரக்ஞானந்தாவுக்கு 2-ம் இடம் கிடைத்தது.

இந்தப் போட்டியில் 6-வது சுற்றில் டுடாவுடன் மோதினார் பிரக்ஞானந்தா. எதிர்பாராதவிதமாக டை பிரேக்கரில் தோற்றார். முதல் பிளிட்ஸ் டை பிரேக்கரில் ஒரு சிறிய தவறு செய்ததால் இந்தத் தோல்வி ஏற்பட்டது. தன் தவறை அவர் எதிர்பார்க்காததால் தோல்வி கண்ட சில நொடிகள் நம்ப முடியாமல் இருக்கையில் சோகத்துடன் அமர்ந்திருந்தார் பிரக்ஞானந்தா. பிறகு உடனடியாக அங்கிருந்து கிளம்பினார்.

கிரிப்டோ செஸ் போட்டியில் செஸ் 24 யூடியூப் தளத்தில் ஹங்கேரிய நாட்டின் பிரபல கிராண்ட் மாஸ்டர் பீட்டர் லேகோ வர்ணனை செய்தார். பிரக்ஞானந்தா - டுடா ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவின் வெற்றியை எதிர்பார்த்த பீட்டர் லேகோ, எதிர்பாராமல் செய்த தவறால் பிரக்ஞானந்தா தோற்றதைக் கண்டு மனம் வருந்தினார். தனது வேதனையை வர்ணனையிலேயே வெளிப்படுத்திய பீட்டர் லேகோ, ஒருகட்டத்தில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை யூடியூபில் பார்த்த ரசிகர்கள் பலரும் பீட்டர் லேகோவுக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். 

இந்நிலையில் பீட்டர் லேகோ கண்ணீர் விட்ட சம்பவம் பற்றி பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் ட்விட்டரில் கூறியதாவது:

முதல் பிளிட்ஸ் டை பிரேக்கரில் டுடாவுக்கு எதிராக பிரக்ஞானந்தா தோற்றபோது பீட்டர் லேகோ உண்மையிலேயே கண்ணீர் விட்ட காணொளியைப் பார்க்க நேர்ந்தது. ஜாம்பவானின் உண்மையான அக்கறை அது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அன்பும் ஆதரவும் அளிக்கும் மனிதர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம்  என்றார்.  

பிரக்ஞானந்தாவுக்காக பீட்டர் லேகோ கண்ணீர் விட்ட சம்பவம் (4:53:10 முதல்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com