சென்னை செஸ் ஒலிம்பியாடில் விளையாடிய ஹரிகாவுக்குப் பெண் குழந்தை!
பிரபல செஸ் வீராங்கனை ஹரிகாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. மகளிர் பிரிவில் நிறைமாத கா்ப்பிணி ஹரிகா, கொனேரு ஹம்பி, ஆா். வைஷாலி, பக்தி குல்கா்னி, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்ற இந்திய ஏ அணி வெண்கலம் வென்றது. போட்டி நிறைவடைந்த பிறகு ஹரிகா கூறியதாவது: 9 மாத கர்ப்பிணியாக இருந்து சாதித்ததால் இது உணர்வுபூர்வமாக உள்ளது. ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது என்பதால் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் அப்போட்டியில் விளையாடலாம் என என் மருத்துவர் சொன்னதிலிருந்து ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று பதக்கம் பெறவேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்டேன். இதைச் சாத்தியமாக்குவதற்காகவே என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தேன். வளைகாப்பு நிகழ்ச்சி இல்லை, பார்ட்டிகள் இல்லை, கொண்டாட்டங்கள் இல்லை... பதக்கம் வென்ற பிறகே இவை அனைத்தும் என முடிவெடுத்தேன். நான் நன்றாக விளையாட வேண்டும் என தினமும் உழைத்தேன். கடந்த சில மாதங்களாக இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்து, அதைச் சாதித்துள்ளேன். இந்திய மகளிர் அணி முதல்முறையாக ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது என்றார்.
இந்நிலையில் ஹரிகாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று தனக்குப் பெண் குழந்தை பிறந்ததாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் ஹரிகா. ரசிகர்களும் செஸ் வீரர்களும் ஹரிகாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.