ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஆட்டம் பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பெர்த் டெஸ்டை ஒளிபரப்பும் சேனல் செவன் தொலைக்காட்சிக்காக வர்ணனையாளராகப் பணியாற்றுகிறார் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் உணவு இடைவேளையின்போது ரிக்கி பாண்டிங்குக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உடனடியாக பெர்த் மைதானத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய உடல்நலப் பாதிப்பு குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. செவன் நெட்வொர்க்குக்காக 40 நிமிடம் வர்ணனை செய்த பாண்டிங், ஆஸி. முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் இன்று அவர் மீண்டும் வர்ணனைக்குத் திரும்பவில்லை. எனினும் தான் தற்போது நலமாக உள்ளதாகத் தனது நண்பர்களிடம் பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 168 டெஸ்டுகள், 375 ஒருநாள், 17 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக மூன்று 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். 2003, 2007 உலகக் கோப்பைகளில் ஆஸி. அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். 77 டெஸ்டுகளில் கேப்டனாக இருந்து 48 வெற்றிகளைப் பெற்றார். 2012-ல் ஓய்வு பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.