
தனது முதல் ரஞ்சி ஆட்டத்தில் சதமடித்து அசத்தியுள்ளார் தமிழக தொடக்க வீரர் சாய் சுதர்சன்.
தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 395 ரன்கள் எடுத்தது. கேப்டன் அகர்வால் 135 ரன்களும் மிகில் ஜெயிஸ்வால் ஆட்டமிழக்காமல் 137 ரன்களும் எடுத்தார்கள். சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளும் விக்னேஷ் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இந்நிலையில் தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்றுள்ளது. 3-ம் நாளான இன்று தமிழக அணி 104 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 460 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தமிழக தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் 179 ரன்களும் ஜெகதீசன் 116 ரன்களும் எடுத்தார்கள். பாபா அபரஜித் 83, பாபா இந்திரஜித் 30 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். தமிழக அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல்தர கிரிக்கெட்டிலும் ரஞ்சி கோப்பைப் போட்டியிலும் அறிமுகமாகியுள்ள சாய் சுதர்சன், முதல் ஆட்டத்திலேயே பெரிய சதமெடுத்து அசத்தியுள்ளார். 273 பந்துகளில் 1 சிக்ஸர், 18 பவுண்டரிகளுடன் 179 ரன்கள் எடுத்தார். சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் 8 ஆட்டங்களில் 3 சதங்கள், 2 அரை சதங்களுடன் 610 ரன்கள் எடுத்தார் சாய் சுதர்சன்.
21 வயது சாய் சுதர்சன் இதுவரை 11 லிஸ்ட் ஏ, 18 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் அணிக்காக 5 ஆட்டங்களில் விளையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.