ஷுப்மன் கில்
ஷுப்மன் கில்

விரைவாக சதமெடுத்த புஜாரா, ஷுப்மன் கில்: வங்கதேச அணிக்கு 513 ரன்கள் இலக்கு!

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதனால் முதல் டெஸ்டை வங்கதேச அணி வெற்றி பெற 513 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சட்டோகிராமில் நடைபெற்று வரும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 133.5 ஓவர்களில் 404 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 86, அஸ்வின் 58 ரன்கள் எடுத்தார்கள். தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 2-ம் நாள் முடிவில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 44 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. மெஹித் ஹசன் 16, எபடாட் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 271 ரன்கள் பின்தங்கியிருந்தது.

3-வது நாளான இன்று வங்கதேச அணி 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எபடாட் 17 ரன்களில் குல்தீப் பந்திலும் மெஹிதி 25 ரன்களில் அக்‌ஷர் படேல் பந்திலும் ஆட்டமிழந்தார்கள். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் முன்னிலை பெற்றதால் ஃபாலோ ஆன் ஆனது வங்கதேச அணி. எனினும் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி.

3-வது நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது. ராகுல் 20, ஷுப்மன் கில் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து நன்கு பேட்டிங் செய்து அதிக ரன்கள் முன்னிலை பெற்றது. கேப்டன் கே.எல். ராகுல் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் 84 பந்துகளில் அரை சதமெடுத்தார். அதன்பிறகு சற்று விரைவாக ரன்கள் எடுக்க ஆரம்பித்தார். அவருக்கு புஜாராவும் நல்ல இணையாக விளங்கினார். 

3-வது நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 80, புஜாரா 33 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 394 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஷுப்மன் கில்லும் புஜாராவும் விரைவாக ரன்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். பவுண்டரி அடித்து 147 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார் ஷுப்மன் கில். இதன்பிறகு 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 87 பந்துகளில் அரை சதமெடுத்த புஜாரா, அதன்பிறகு இன்னும் வேகமாக ரன்கள் சேர்த்து ஆச்சர்யப்படுத்தினார். 130 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார் புஜாரா. கடந்த 52 இன்னிங்ஸில் அவர் எடுத்துள்ள முதல் சதம் இது. கடைசியாக ஜனவரி 2019-ல் சதமடித்தார். இந்த இன்னிங்ஸில் கடைசி 43 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். 

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 61.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா 102, கோலி 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் முதல் டெஸ்டை வங்கதேச அணி வெற்றி பெற 513 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

3-வது நாள் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்துள்ளது. ஷான்டோ 25, ஜகீர் ஹசன் 17 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 471 ரன்கள் தேவைப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com