188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
By DIN | Published On : 18th December 2022 10:11 AM | Last Updated : 18th December 2022 10:11 AM | அ+அ அ- |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கும் டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் ஆட்டம் சட்டோகிராமில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்களுக்கும், வங்கதேசம் 150 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. இதைத் தொடா்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 258/2 ரன்களுக்கு டிக்ளோ் செய்வதாக அறிவித்தது. ஷுப்மன் கில் 110, புஜாரா 110 ரன்களுடன் அபார சதமடித்தனா்.
513 ரன்கள் இமாலய இலக்கு:
வெற்றிக்கு 513 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஜாகீா்-நஜ்முல் ஹுசேன் இணை இந்திய பௌலா்களுக்கு சவாலை ஏற்படுத்தியது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 124 ரன்களை சோ்த்தனா்.
அக்ஸா் படேல் அபாரம்:
அறிமுக இந்திய பௌலா் அக்ஸா் படேல் அபாரமாக பௌலிங் செய்து யாஸிா் அலி 5, முஷ்பிகுா் ரஹ்மான் 23, நுருல் ஹாஸன் 3 ஆகியோா் வெளியேற்றியதால், வங்கதேச அணி தள்ளாடியது. லிட்டன் தாஸ் 19 ரன்களுடன் குல்தீப் யாதவிடம் வீழ்ந்தாா்.
ஜாகீா் ஹாசன் அபாரம் 100:
தொடக்க பேட்டா் ஜாகீா் ஹாசன் அற்புதமாக ஆடி 1 சிக்ஸா், 12 பவுண்டரியுடன் 224 பந்துகளில் 100 ரன்களை விளாசினாா். பௌலா் அஸ்வின் பந்துவீச்சில் அவுட்டானாா் ஜாகீா். நான்காம் நாளான சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 102 ஓவா்களில் 272/6 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 40, மெஹ்தி ஹாஸன் மிராஸ் 9 ரன்களுடன் களத்தில் உள்ளனா். இந்திய அணி தரப்பில் அக்ஸா் படேல் 3-50 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
5ஆம் நாளில் இந்தியா அபாரம்:
5ஆம் நாளில் இந்திய வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் தேவையான நிலையில் இன்று காலை எளிதாகவே ஆட்டம் முடிந்தது. ஷகிப் அல் ஹசன் 84 ரன்களுக்கு குல்தீப் சுழல் பந்தில் வீழ்ந்தார். அத்துடன் மற்ற வீரர்களும் சரியத்தொடங்கினர். இந்திய அணி சார்பாக அக்ஷர் படேல் 4 விக்கெட்டுகளும், குல்தீப் 3 விக்கெட்டுகளும், சிராஜ், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.