தோல்வியிலும் கவனம் ஈர்த்த எம்பாப்பே!

7 கோல்களை அடித்த மெஸ்ஸியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 8 கோல்களுடன் தங்கக் காலணி விருதை வென்றார் எம்பாப்பே.
தோல்வியிலும் கவனம் ஈர்த்த எம்பாப்பே!

உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா வென்றதால் மெஸ்ஸி உலகின் சிறந்த கால்பந்து வீரராகப் போற்றப்படுகிறார்.

எனினும் தோல்வியடைந்தாலும் பிரான்ஸின் 23 வயது வீரர் எம்பாப்பே உலகக் கால்பந்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். எம்பாப்பேவின் மகத்தான ஆட்டம் தான் இறுதிச்சுற்றை மிகவும் சுவாரசியமாக்கியது.

பொறி பறந்த 2-வது பாதியில் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து அசத்தினார் எம்பாப்பே. 90 நிமிடங்களுக்குப் பிறகு இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்தில் 108-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, 118-வது நிமிடத்தில் எம்பாப்பே இன்னொரு கோல் அடித்து 3-3 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். அதன்பிறகு இரு அணிகளாலும் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியாததால் ஆட்டம் பெனால்டி பகுதிக்குச் சென்றது. இதில் 4-2 என ஆர்ஜென்டீனா வென்று கால்பந்து உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 

1966-ல் இங்கிலாந்தின் ஜெஃப் ஹர்ஸ்ட் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். அதற்கடுத்ததாக எம்பாப்பே ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார்.

2018 உலகக் கோப்பையில் 4 கோல்கள் அடித்த எம்பாப்பே இம்முறை 8 கோல்கள் அடித்து ஒட்டுமொத்தமாக 12 உலகக் கோப்பை கோல்களை அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இறுதிச்சுற்றில் 3 கோல்கள் அடித்து அசத்தினார்.

2022 உலகக் கோப்பைப் போட்டியில்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-1 வெற்றியில் தனது முதல் 2022 உலகக் கோப்பை கோல் அடித்தார் எம்பாப்பே.

டென்மார்க்குக்கு எதிரான 2-0 வெற்றியில் இரு கோல்களையும் அடித்தார்.

துனிசியாவுக்கு எதிரான 0-1 அதிர்ச்சித் தோல்வியில் அவரால் ஒரு கோலும் அடிக்க முடியவில்லை. 

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்துக்கு எதிரான 3-1 வெற்றியில் இரு கோல்களை அடித்தார்.

காலிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான 2-1 வெற்றியிலும் அரையிறுதியில் மொராக்கோவுக்கு எதிரான 2-0 வெற்றியிலும் எம்பாப்பே ஒரு கோலும் அடிக்கவில்லை.

இதற்கும் சேர்த்து இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்தார். 

7 கோல்களை அடித்த மெஸ்ஸியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 8 கோல்களுடன் தங்கக் காலணி விருதை வென்றார் எம்பாப்பே.

இளம் வீரர் என்பதால் இனி வரும் உலகக் கோப்பைப் போட்டிகளிலும் எம்பாப்பேவின் ஆட்டத்தைக் கண்டு ரசிக்கலாம். இப்போதே எம்பாப்பேவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். கால்பந்து விளையாட்டின் அடுத்த நாயகன் என அனைத்துத் தரப்பாலும் அடையாளம் காணப்படுகிறார். எம்பாப்பே அடுத்தடுத்த உலகக் கோப்பைப் போட்டிகளில் மேலும் பல சாதனைகள் புரிவார் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com