சக வீரர்களுடன் பிரச்னையில்லை: அஸ்வின்

இந்திய அணியின் சீருடையைப் பெருமையுடன் அணிந்தது முதல் அதீதமாகச் சிந்திப்பவர் என்கிற முத்திரை...
சக வீரர்களுடன் பிரச்னையில்லை: அஸ்வின்

அதீதமாகச் சிந்திப்பவர் எனத் தன் மீது விழுந்துள்ள முத்திரை குறித்து விளக்கம் அளித்துள்ளார் கிரிக்கெட் வீரர் அஸ்வின்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றுள்ளது இந்திய அணி. கடைசி டெஸ்டில் 145 ரன்கள் இலக்கை எதிர்கொள்ள இந்திய அணி மிகவும் சிரமப்பட்டபோது அஸ்வினும் ஸ்ரேயஸ் ஐயரும் திறமையாகச் சூழலைக் கையாண்டார்கள். 7 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்கிற நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் 29, அஸ்வின் 42 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியைக் கரை சேர்த்தார்கள். ஆட்ட நாயகன் விருதை வென்றார் அஸ்வின்.

இந்நிலையில் அதீதமாகச் சிந்திப்பவர் எனத் தன் மீது விழுந்துள்ள முத்திரை குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் அஸ்வின். அவர் கூறியதாவது:

இந்திய அணியின் சீருடையைப் பெருமையுடன் அணிந்தது முதல் அதீதமாகச் சிந்திப்பவர் என்கிற முத்திரை என் மீது விழுந்துள்ளது. அதைப் பற்றித் தற்போது சிறிது நேரம் சிந்தித்தேன். மக்கள் தொடர்பாளர்களைக் கொண்டு என்னைப் பற்றிய இந்த எண்ணங்களை முற்றிலும் நான் அழித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் பயணமும் முக்கியமானது, சிறப்பானது. சிலருடைய பயணத்தில் அதீதமாகச் சிந்திக்க வேண்டியிருக்கும். சிலர் பயணத்தில் பெரிதாகச் சிந்திக்கத் தேவையில்லை. நாலு சுவற்றுக்குள் யாராவது என்னை, அதீதமாகச் சிந்திப்பவர் என்றால், அப்படித்தான் நான் என்னுடைய கிரிக்கெட்டை விளையாடுவேன், மற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்வது போல இல்லை என எண்ணிக்கொள்வேன். நான் விளையாட்டை மிகவும் ஆழமாகச் சிந்தித்து என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன். நல்ல யோசனைகள் பகிரப்பட்டால் அவை நம்ப முடியாத சாதனைகளாக மாறும் என்பதில் நம்பிக்கை கொண்டவன். அதற்கு வரவேற்பு இல்லாவிட்டாலும் என்னைத் தடுக்காது. ஏனெனில் என்னுடைய லட்சியம், வாக்குவாதத்தில் ஜெயிப்பது அல்ல. இறுதியில் கற்றுக்கொள்வது தான் முக்கியம். 

பொறுப்புத் துறப்பு: என் சக வீரர்களுடனோ வேறு யாருடனோ எனக்கு எவ்விதப் பிரச்னையும் கிடையாது. பயணத்தில் படித்த சில கட்டுரைகளின் அடிப்படையில் என்னுடைய பதிலை அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com