இந்தியா - மே.இ. தீவுகள் ஒருநாள் தொடர்: ஆமதாபாத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
By DIN | Published On : 01st February 2022 02:50 PM | Last Updated : 01st February 2022 02:50 PM | அ+அ அ- |

ஆமதாபாத் - மோடி மைதானம்
இந்தியா - மே.இ. தீவுகள் அணிகள் மோதும் ஒருநாள் தொடர், ரசிகர்கள் இன்றி ஆமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன.
கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75% ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. விளையாட்டு அரங்குகளில் 75% ரசிகர்கள் அனுமதியுடன் போட்டிகள் நடக்கலாம் என மேற்கு வங்க அரசு அனுமதி அளித்ததையடுத்து ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 50,000 ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறும் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்த நிலை இல்லை. ஆமதாபாத்தில் நிலவும் கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு 3 ஒருநாள் ஆட்டங்களிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 6 அன்று ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 1000-மாவது ஆட்டத்தை இந்திய அணி விளையாடவுள்ளது.