ஆஸி. அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி

2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. 
ஆஸி. அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.

கடந்த வருட செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி. முதல் ஒருநாள் ஆட்டம் செப்டம்பர் 17 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது. பிறகு, பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தொடர் ரத்தானது குறித்து அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். 

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் மறுத்ததால் ஆஸ்திரேலிய அணியும் தொடரை ரத்து செய்யுமா என பாகிஸ்தான் ரசிகர்கள் பயந்திருந்தார்கள். இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது. 1998-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்குச் செல்வதால் இத்தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 

மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கான ஆஸ்திரேலிய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com