சஹால், குல்தீப் யாதவ் மீண்டும் ஒன்றாக விளையாடுவார்களா?: ரோஹித் சர்மா பதில்

குல்தீப் யாதவை மெல்ல மெல்ல அணிக்குள் கொண்டு வர வேண்டும்...
சஹால், குல்தீப் யாதவ் மீண்டும் ஒன்றாக விளையாடுவார்களா?: ரோஹித் சர்மா பதில்

சஹால், குல்தீப் ஆகிய இருவரையும் ஒன்றாக விளையாட வைக்கும் திட்டம் உள்ளது என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. இரு தொடர்களுக்கும் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. 

ஒருநாள் தொடருக்காக ஆமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சைனி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப், பாதுகாப்பு அதிகாரி பி. லோகேஷ், மசாஜ் நிபுணர் ராஜீவ் குமார் என ஒட்டுமொத்தமாக ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஆமதாபாத்தில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மாவும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குகிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அப்போது அவர் கூறியதாவது:

முந்தைய காலத்தில் சஹாலும் குல்தீப் யாதவும் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார்கள். இருவரும் ஒன்றாக இணைந்து விளையாடியபோது தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். கூடுதல் பேட்டர், கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் போன்ற அணித் தேர்வுக்காக இருவரில் ஒருவர் விளையாட முடியாமல் போனது. எனினும் சஹால், குல்தீப் ஆகிய இருவரையும் ஒன்றாக விளையாட வைக்கும் திட்டம் உள்ளது.

குல்தீப் யாதவை மெல்ல மெல்ல அணிக்குள் கொண்டு வர வேண்டும். அவசரம் காட்டத் தேவையில்லை. அவருடைய திறமையைக் கொண்டுவர உரிய அவகாசம் அளிக்கப்பட வேண்டும். அவரிடம் அளவுக்கதிகமாக எதிர்பார்க்கும் நிலைக்கு வரக்கூடாது. இந்தச் சூழலைக் கவனமாகக் கையாள வேண்டும். நிறைய ஆட்டங்கள் ஆடினால் குல்தீப் யாதவால் நன்குப் பந்துவீச முடியும். அதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம் என்றார். 

இந்திய ஒருநாள் அணியில் சஹால், 2021 முதல் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். குல்தீப் யாதவ் கடந்த வருடம் 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார். இந்திய அணியில் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடம்பிடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com