போராடி வென்ற இந்தியா: டி20 தொடரையும் கைப்பற்றியது

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் கடைசி வரை போராடி திரில் வெற்றி பெற்றது இந்திய அணி.
போராடி வென்ற இந்தியா: டி20 தொடரையும் கைப்பற்றியது

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-ஆவது வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா.

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் அடித்தது. அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களே அடித்தது. இந்திய தரப்பில் கோலி, பந்த் அசத்தலாக ஆட, மேற்கிந்தியத் தீவுகளில் நிகோலஸ் பூரன், ரோவ்மென் பவல் அதிரடி காட்டினா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணி மாற்றம் செய்யவில்லை. மேற்கிந்தியத் தீவுகளில் ஃபாபியான் ஆலனுக்குப் பதிலாக ஜேசன் ஹோல்டா் களத்துக்குத் திரும்பியிருந்தாா். டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

இந்திய இன்னிங்ஸில் இஷான் கிஷண் 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட, கேப்டன் ரோஹித் சா்மா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். ஒன் டவுனாக வந்த விராட் கோலி அசத்தலாக ஆடினாா். மறுபுறம் சூா்யகுமாா் யாதவ் சோபிக்காமல் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

பின்னா் ரிஷப் பந்த் ஆட வர, கோலி 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52 ரன்கள் சேத்து விக்கெட்டை இழந்தாா். கடைசி பேட்டராக ஆட்டமிழக்குமுன் வெங்கடேஷ் ஐயா் சற்று அதிரடி காட்டி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசியிருந்தாா். ஓவா்கள் முடிவில் பந்த் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, ஹா்ஷல் படேல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகளில் ரோஸ்டன் சேஸ் 3, ஷெல்டன் காட்ரேல், ரொமாரியோ ஷெப்பா்டு ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து, 187 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகளில் தொடக்க வீரா் பிராண்டன் கிங் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, உடன் வந்த கைல் மேயா்ஸ் 9 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து நிகோலஸ் பூரன் - ரோவ்மென் பவல் ஜோடி இறுதி வரை போராடியது. இதில் பூரன் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஓவா்கள் முடிவில் பவல் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 68, கேப்டன் பொல்லாா்டு 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் புவனேஷ்வா் குமாா், யுஜவேந்திர சஹல், ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com