நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: தெ.ஆ. அணி படுதோல்வி

ஆட்ட நாயகனாக ஹென்றி தேர்வானார். 
நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்துள்ளது. 

தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. பிப்ரவரி 17 அன்று தொடங்கியுள்ள டெஸ்ட் தொடர், மார்ச் 1 அன்று நிறைவுபெறுகிறது.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்டில் முதல் நாளன்று டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. கடைசியில் அது சரியான முடிவாகவும் அமைந்தது. தென்னாப்பிரிக்க அணி, 49.2 ஓவர்கள் மட்டும் விளையாடி 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேட் ஹென்றி அட்டகாசமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹம்ஸா அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராகக் குறைந்த ரன்களை தெ.ஆ. அணி எடுத்தது. இதன்பிறகு விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 117.5 ஓவர்களில் 482 ரன்கள் எடுத்தது. ஹென்றி நிகோல்ஸ் 105 ரன்களும் டாம் பிளெண்டல் 96 ரன்களும் எடுத்தார்கள். நிகோல்ஸின் 8-வது டெஸ்ட் சதம் இது. 11-வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய ஹென்றி ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்து அசத்தினார். கடைசி விக்கெட்டுக்கு பிளெண்டலும் ஹென்றியும் 94 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்காவை வெறுப்பேற்றினார்கள். ஆலிவியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 387 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்ஸிலும் தெ.ஆ. பேட்டர்களுக்குச் சோதனை தொடர்ந்தது. தொடக்க வீரர்களை (எர்வீ, எல்கர்) ரன் எதுவும் எடுக்க விடாமல் வெளியேற்றினார்கள் செளதியும் ஹென்றியும். மார்க்ரம் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2-ம் நாளின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி, 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்தது. வான் டர் டுசென் 9, பவுமா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 353 ரன்கள் பின்தங்கியிருந்தது. 

3-ம் நாளான இன்று தென்னாப்பிரிக்க அணி 41.4 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது. பவுமா அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். செளதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹென்றி தேர்வானார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com