ஐபிஎல்: உறுதி செய்யப்பட்ட 9 அணிகளின் கேப்டன்கள்

10 அணிகளில் ஆர்சிபி அணி மட்டுமே தனது கேப்டனை இன்னும் அறிவிக்காமல் உள்ளது.
ரோஹித் சர்மா - ரிஷப் பந்த்
ரோஹித் சர்மா - ரிஷப் பந்த்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டதையடுத்து 10 அணிகளில் 9 அணிகளின் கேப்டன்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். 

2022 ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது. புதிய அணிகளுக்கு லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் எனப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. 

இந்நிலையில் சில ஐபிஎல் அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியிட்டுள்ளது அந்த அணி. இதையடுத்து 10 அணிகளில் 9 அணிகளின் கேப்டன்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். பழைய அணிகளில் கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய இரு அணிகளுக்கும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

ஐபிஎல் 2022 கேப்டன்கள்

சிஎஸ்கே - தோனி 
மும்பை - ரோஹித் சர்மா
தில்லி - ரிஷப் பந்த் 
கொல்கத்தா - ஷ்ரேயஸ் ஐயர்
ராஜஸ்தான் - சஞ்சு சாம்சன் 
சன்ரைசர்ஸ் - கேன் வில்லியம்சன்
பஞ்சாப் - மயங்க் அகர்வால் 
லக்னெள - கே.எல். ராகுல் 
குஜராத் - ஹார்திக் பாண்டியா 

10 அணிகளில் ஆர்சிபி அணி மட்டுமே தனது கேப்டனை இன்னும் அறிவிக்காமல் உள்ளது. ஆர்சிபி அணி கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் டு பிளெஸ்சிஸ் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com