சென்னை சேப்பாக்கத்தில் புதிய உலக சாதனை படைப்பாரா ரோஹித் சர்மா?

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் புதிய உலக சாதனை படைப்பாரா ரோஹித் சர்மா?

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக அதிக டி20 ஆட்டங்களில் வென்ற அணி என்கிற சாதனையைச் சமன் செய்துள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என இந்திய அணி முழுமையாக வென்றுள்ளது. தரம்சாலாவில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. கேப்டன் தசுன் ஷனகா 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவேஷ் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 45 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டன. 

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய ரோஹித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். மேலும் இலங்கையை வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளைப் பெற்றுள்ளது இந்திய அணி. டி20 கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற ஆப்கானிஸ்தானின் உலக சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது. இரு அணிகளும் தொடர்ச்சியாகத் தலா 12 வெற்றிகளைப் பெற்றுள்ளன. 

ரோஹித் சர்மா தலைமையில் சமீபமாக நியூசிலாந்து, மே.இ. தீவுகள், இலங்கை அணிகளுக்கு எதிராக இந்திய அணி 3-0 என முழு வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த 9 வெற்றிகளுடன் அதற்கு முன்பு டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களையும் கோலி தலைமயிலான இந்திய அணி வென்றது. 

தொடர்ச்சியான 12 வெற்றிகளுடன் உலக சாதனையைச் சமன் செய்துள்ள இந்திய அணி அடுத்ததாக எப்போது டி20 ஆட்டத்தில் மீண்டும் விளையாடப் போகிறது?

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு அந்த அணியுடன் இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது இந்திய அணி. இலங்கை தொடருக்குப் பிறகு ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. 

ஐபிஎல் போட்டி முடிவடைந்த பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜூன் 9 முதல் ஜூன் 19 வரையிலான டி20 தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது. 

இந்தியாவுடன் உலக சாதனையைக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, தனது சாதனையை 2018 பிப்ரவரி முதல் 2019 செப்டம்பர் வரை நிகழ்த்தியது. இதனால் அந்த அணியால் இந்தியாவுடன் இனி போட்டி போட முடியாது. அதே 12 தொடர்ச்சியான வெற்றிகளுடன் உலக சாதனையைக் கொண்டுள்ள இன்னொரு அணி, ரொமானியா. எனினும் அது டெஸ்ட் விளையாடும் தேசம் அல்ல. அந்த அணி சிறிய நாடுகளுடன் விளையாடி அச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதனால் டெஸ்ட் விளையாடும் அணிகளில் தொடர்ச்சியாக டி20 வெற்றிகளைப் பெற்ற அணி என்கிற உலக சாதனையை இந்தியா நிகழ்த்துமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூன் 9 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணி விளையாடவுள்ளது. அந்த ஆட்டத்தையும் இந்திய அணி வென்றுவிட்டால் தொடர்ச்சியான 13 வெற்றிகளுடன் புதிய உலக சாதனை நிகழ்த்தப்படும். இதனால் சென்னை டி20 ஆட்டத்துக்குக் கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com