தலைக்கவசத்தைத் தாக்கிய பந்து: மந்தனாவின் உடல்நிலை பற்றி பிசிசிஐ அறிக்கை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தலையில் காயமடைந்த ஸ்மிருதி மந்தனாவின் உடல்நிலை பற்றி பிசிசிஐ தகவல் அளித்துள்ளது.
மந்தனா (கோப்புப் படம்)
மந்தனா (கோப்புப் படம்)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பவுன்சர் பந்தால் காயமடைந்த ஸ்மிருதி மந்தனாவின் உடல்நிலை பற்றி பிசிசிஐ தகவல் அளித்துள்ளது.

நியூசிலாந்தில் மார்ச் 4 முதல்  மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.

நேற்று, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய இந்திய மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியின் இன்னிங்ஸில், ஷப்னிம் இஸ்மாயிலின் பவுன்சர் பந்து, தொடக்க வீராங்கனை மந்தனாவின் தலைக்கவசத்தைத் தாக்கியது. உடனடியாகப் பரிசோதித்த மருத்துவர், தொடர்ந்து விளையாட் அனுமதி அளித்தார். எனினும் ஒரு ஓவருக்குப் பிறகு வலி தாங்க முடியாமல் 12 ரன்களுடன் ஓய்வறைக்குத் திரும்பினார் மந்தனா. 

தலைக்கவசத்தைப் பந்து தாக்கினாலும் மூளை அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை, அதற்குண்டான பின்விளைவுகளும் எதுவும் இல்லை என ஐசிசி தெரிவித்தது. இந்நிலையில் மந்தனாவின் உடல்நிலை பற்றி பிசிசிஐ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவர்களின் ஆய்வுக்குப் பிறகு மந்தனாவின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் பேட்டிங் செய்தபோது காயத்தின் பாதிப்பு காரணமாகவே உடனடியாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். ஆட்டத்தில் பங்கேற்பதிலிருந்து அவர் ஓய்வெடுத்துக் கொண்டார். இப்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது மந்தனாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருடைய உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். அவர் அடுத்த ஆட்டத்தில் விளையாடுவது பற்றி உரிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நாளை விளையாடுகிறது. மார்ச் 6 அன்று தனது முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com