வெற்றிக்காகப் போராடும் வங்கதேச அணி: பரபரப்பான கட்டத்தில் நியூசிலாந்து டெஸ்ட்

17 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
வெற்றிக்காகப் போராடும் வங்கதேச அணி: பரபரப்பான கட்டத்தில் நியூசிலாந்து டெஸ்ட்
Updated on
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 4-வது நாள் முடிவில் 17 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது.

முதல் டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 328 ரன்கள் எடுத்தது.

3-ம் நாள் முடிவில் வங்கதேச அணி, 156 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் 73 ரன்கள் முன்னிலை பெற்றது. யாஷிர் அலி 11, மெஹிதி ஹசன் மிராஸ் 20 ரன்கள் எடுத்துக் களத்தில் இருந்தார்கள். வங்கதேச அணியில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 78 ரன்கள், ஷாண்டோ 64 ரன்கள், கேப்டன் மோமினுல் ஹஹ் 88 ரன்கள், விக்கெட் கீப்பர் லிடன் தாஸ் 86 ரன்கள் எடுத்தார்கள்.

500 ரன்களை எடுத்து நியூசிலாந்து அணிக்கு மேலும் நெருக்கடி தரும் என எதிர்பார்க்கப்பட்ட வங்கதேச அணி 4-வது நாளில் 176.2 ஓவர்களில் 458 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் முன்னிலை பெற்றது வங்கதேச அணி. நியூசி. தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இதன்பிறகு விளையாடிய நியூசிலாந்து அணி 4-ம் நாள் முடிவில் 63 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. கடைசி 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது வங்கதேச அணி. டெய்லர் 37, ரச்சின் ரவீந்திரா 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். எபடாட் ஹுசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 17 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கடைசி நாளில் நியூசிலாந்தை 200, 250 ரன்களுக்குள் வீழ்த்தினால் வங்கதேச அணிக்கு மகத்தான வெற்றி அமையும். அல்லது நியூசிலாந்து அணி கடைசி நாளில் வங்கதேச அணியை எதிர்பாராதவிதமாக துவம்சம் செய்யப் போகிறதா? பரபரப்பான 5-ம் நாளின் முடிவை அறிந்துகொள்ள காத்திருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com