இந்த வீரர் 3-வது டெஸ்டில் விளையாட மாட்டார்: விராட் கோலி அறிவிப்பு

யாரைத் தேர்வு செய்வது என்கிற குழப்பத்தில் உள்ளோம். இதனால் எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது.
இந்த வீரர் 3-வது டெஸ்டில் விளையாட மாட்டார்: விராட் கோலி அறிவிப்பு

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விளையாட மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 240 ரன்கள் இலக்கை விரட்டியபோது தெ.ஆ. கேப்டன் எல்கர் 96 ரன்களும் வான் டர் டுசென் 40 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்கள். ஆட்ட நாயகனாக எல்கர் தேர்வானார். 3-வது டெஸ்ட், கேப் டவுனில் நாளை (ஜனவரி 11) தொடங்குகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

எனது அணிக்காகச் சிறப்பாக விளையாடுவதில் நான் பெருமை கொள்கிறேன். எனவே நீண்ட காலமாக நன்றாக விளையாடி வருகிறேன். கடந்த ஒரு வருடமாக அணியின் பல முக்கியமான தருணங்களில் நான் பங்களித்துள்ளேன். யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது நாங்கள் தரவரிசையில் 7-ம் இடத்தில் இருந்தோம். இப்போது நாங்கள் நீண்ட நாளாகவே நெ.1 அணியாக உள்ளோம். எங்களிடம் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். எனவே யாரைத் தேர்வு செய்வது என்கிற குழப்பத்தில் உள்ளோம். இதனால் எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. 3-வது டெஸ்டில் விளையாட நான் சரியான உடற்தகுதியுடன் உள்ளேன். கடந்த டெஸ்டில் ஏற்பட்ட காயத்திலிருந்து சிராஜ் தேறி வருகிறார். அவர் டெஸ்டில் விளையாடுவதற்கான உடற்தகுதியைக் கொண்டிருப்பார் என நினைக்கவில்லை. முழு உடற்தகுதி இல்லாத ஒரு வீரரை டெஸ்டில் ஆடவைக்க வேண்டியதில்லை. 3-வது டெஸ்டில் சிராஜுக்குப் பதிலாக யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என நாங்கள் முடிவெடுக்கவில்லை. பயிற்சியாளர், துணை கேப்டனிடம் இதுபற்றி கலந்து பேசி முடிவெடுப்பேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com