அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: மே.இ. தீவுகள் அணி அதிர்ச்சித் தோல்வி
By DIN | Published On : 17th January 2022 11:04 AM | Last Updated : 17th January 2022 05:32 PM | அ+அ அ- |

மே.இ. தீவுகள் அணி (கோப்புப் படம்)
கிங்ஸ்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை அயர்லாந்து அணி வென்று ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.
முதல் இரு ஒருநாள் ஆட்டங்களின் முடிவில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 53 ரன்களும் ஜேசன் ஹோல்டர் 44 ரன்களும் எடுத்தார்கள். ஆன்டி மெக்பிரைன் 4 விக்கெட்டுகளும் கிரைக் யங் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி, 44.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்றதோடு ஒருநாள் தொடரை 2-1 எனவும் கைப்பற்றியது. கேப்டன் பால் ஸ்டிரிங் 44 ரன்களும் ஆன்டி மெக்பிரைன் 59 ரன்களும் ஹாரி டெக்டர் 52 ரன்களும் எடுத்தார்கள். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் ஆன்டி மெக்பிரைனுக்கு வழங்கப்பட்டன.
டெஸ்ட் விளையாடும் நாடுகளில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தானைத் தவிர முதல்முறையாக வேறொரு நாட்டுக்கு எதிரான ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி வென்றுள்ளது.