நியூசிலாந்து அரசின் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டி20, மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுவதாக இருந்தது. சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட ராஸ் டெய்லர் விளையாடும் கடைசி ஆட்டங்களில் இதுவும் அடங்கியிருந்தது. ஜனவரி 30 அன்று ஒருநாள் தொடர் தொடங்கவிருந்தது. டி20 ஆட்டம் பிப்ரவரி 8 அன்று நடைபெறவிருந்தது.
நியூசிலாந்துக்கு வரும் விமானப் பயணிகள் 10 நாள்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற விதிமுறை உண்டு. இந்தக் காரணத்துக்காக நியூசிலாந்தின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்யும் தென்னாப்பிரிக்கா இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 17 அன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்குச் சென்று தொடர்களை முடித்துவிட்டு நியூசிலாந்து திரும்பும் வீரர்கள் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்களால் தெ.ஆ. டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது. இந்தக் காரணத்தால் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து அணி தற்போது ஒத்திவைத்துள்ளது. கரோனா காலத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளின் தொடர்கள் இதுவரை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.