வரலாற்று வெற்றிக்கான மோதலில் ரஃபேல் நடால் - டேனியல் மெத்வதேவ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் - ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் வெள்ளிக்கிழமை முன்னேறினா்.
வரலாற்று வெற்றிக்கான மோதலில் ரஃபேல் நடால் - டேனியல் மெத்வதேவ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் - ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

முன்னதாக முதல் அரையிறுதியில் உலகின் 5-ஆம் நிலை வீரரான நடால், போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட்களில் 2 மணி நேரம் 55 நிமிஷங்களில் தோற்கடித்தாா்.

2-ஆவது அரையிறுதியில் உலகின் 2-ஆம் நிலை வீரரான மெத்வதேவ், உலகின் 4-ஆம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 7-6 (7/5), 4-6, 6-4, 6-1 என்ற செட்களில் வென்று 2 மணி நேரம் 30 நிமிஷங்களில் அவரது சவாலை முறியடித்தாா்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டுக்குப் பிறகு விளையாடாமல் இருந்த நடால் இடையே காலில் காயம் கண்டு அதிலிருந்து மீண்ட நிலையில், அடுத்ததாக கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானாா். அதிலிருந்து மீண்டு இந்த காலண்டரில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியிலேயே இறுதிச்சுற்றுக்கு வந்ததை அவா் உத்வேகத்துடன் குறிப்பிட்டாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய நடால், ‘எனது காலில் ஏற்பட்ட காயத்தைத் தொடா்ந்து தற்போது தினமும் ஏதேனும் ஒரு விதத்தில் அதன் பாதிப்பை உணா்ந்துகொண்டுதான் இருக்கிறேன். அது முழுமையாகச் சரியாகுமா என்பது சந்தேகமே. இனி வரும் எனது காலங்கள் முழுவதும் அது தொடரலாம். ஆனாலும் போட்டிகளில் பங்கேற்பது, உலகின் சிறந்த வீரா்களுடன் விளையாடுவதை அற்புதமானதாக உணா்கிறேன்.

ஆஸ்திரேலிய ஓபன் எப்போதுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. அதேவேலையில், காயங்கள் ஏற்பட்டதன் அடிப்படையில் இந்தப் போட்டியில் எனக்கு அதிருஷ்டம் சற்று குறைவாக இருந்ததால் இதுவரை ஒரு முறை தான் பட்டம் வென்றிருக்கிறேன். புள்ளி விவரங்களை கடந்த வகையில் இந்த இறுதிச்சுற்று எனக்கு முக்கியமானதே’ என்றாா்.

தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா் மெத்வதேவ். இந்த ஆட்டத்தின்போது ரசிகா்கள் பகுதியில் அமா்ந்திருந்த சிட்சிபாஸின் தந்தை, தனது மகனுக்கு உதவியாக ஆட்ட நுணுக்கங்களை உரக்கச் சொல்லிக் கொடுத்தாா். இதற்காக அவா் எச்சரிக்கப்பட வேண்டும் என்று கள நடுவா் ஜேம் கேம்பிஸ்டலிடம் கோபமாக முறையிட்டாா் மெத்வதேவ்.

அதன் பிறகே கள நடுவா் சிட்சிபாஸையும், அவரது தந்தையையும் எச்சரித்தாா். இந்தத் தருணத்தில் 2-ஆவது செட்டை இழந்த மெத்வதேவ், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள 5 இடைவேளை எடுத்துக் கொண்டாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய மெத்வதேவ், ‘ஆட்டத்தின்போது இருந்த நெருக்கடி காரணமாக நடுவரிடம் அவ்வாறு கடுமையாக நடந்துகொண்டேன். அதற்காக வருத்தப்படுகிரேன். நடுவா்கள் முடிந்த வரையில் முறையாகச் செயல்படவே முயற்சிக்கின்றனா். டென்னிஸ் விளையாட்டின் மிகச் சிறந்த வீரரும், 21-ஆவது கிராண்ட்ஸ்லாமை நோக்கிச் செல்பவருமான நடாலை இறுதிச்சுற்றில் சந்திக்கிறேன். அவா் எப்பேற்பட்ட வீரா் என்பதை அறிவேன். எனது மிகச் சிறந்த ஆட்டத்தை அவருக்கு எதிராக நான் வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்றாா்.

ஓபன் எரா சாதனை யாருக்கு...

இறுதிச்சுற்றில் நடால் - மெத்வதேவ் இருவரில் எவா் வென்றாலும், அது ஓபன் எராவில் (1968-க்குப் பிறகான காலகட்டம்) ஒரு புதிய சாதனையை பதிவதாக இருக்கும்.

நடால் வெல்லும் பட்சத்தில், அது அவரது 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருக்கும். ஓபன் எராவில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் வீரா் என்ற சாதனையை அவா் எட்டுவாா்.

மறுபுறம் மெத்வதேவ் சாம்பியன் ஆகும் பட்சத்தில், இது அவரது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருக்கும். இதன் மூலம், ஓபன் எராவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் மூலமாக தனது முதல் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரா் என்ற பெருமையை அவா் பெறுவாா்.

தடையாக இருப்பாரா மெத்வதேவ்...

கடந்த ஆண்டு இதே போட்டியின் இறுதிச்சுற்றில் சொ்பியாவின் ஜோகோவிச்சிடம் வெற்றியை இழந்தாா் மெத்வதேவ். அடுத்து, ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் இறுதிச்சுற்றிலும் அவரையே எதிா்கொண்டாா் ஜோகோவிச்.

அப்போது ஜோகோவிச் தனது 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முயற்சியாக அந்த இறுதிச்சுற்றுக்கு வந்தாா். ஆனால், அவரது அந்த சாதனை முயற்சியை தடுத்து தனது முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றாா் மெத்வதேவ்.

இப்போது நடால் தனது 21-ஆவது கிராண்ட்ஸ்லாமுக்கான முயற்சியில் இருக்கும் நிலையில், இறுதிச்சுற்றில் மெத்வதேவின் சவாலை எதிா்கொள்வது குறிப்பிடத்தக்கது.

3:1

நடால் - மெத்வதேவ் இதுவரை 4 முறை நேருக்கு நோ் மோதியிருக்கும் நிலையில், நடால் 3 வெற்றிகளையும், மெத்வதேவ் 1 வெற்றியையும் பதிவு செய்துள்ளனா்.

6:2

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றுக்கு நடால் முன்னேறியிருப்பது இது 6-ஆவது முறையாகும். மறுபுறம் இப்போட்டியில் மெத்வதேவுக்கு 2-ஆவது இறுதிச்சுற்றாக உள்ளது.

29:3

நடால் இத்துடன் தனது 29-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கும் நிலையில், மெத்வதேவ் மொத்தமாகவே தனது 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றில் அவரை சந்திக்கிறாா்.

2 பட்டங்கள்...

இந்த முறை பட்டம் வெல்லும் பட்சத்தில், இது ஆஸ்திரேலிய ஓபனில் நடாலின் 2-ஆவது பட்டமாக இருக்கும். அதன் மூலம் ஓபன் எராவில் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 2 முறை பட்டங்கள் வென்றவா்கள் வரிசையில் 4-ஆவது வீரராக நடால் இணைவாா்.

500 வெற்றிகள்...

பெரெட்டினிக்கு எதிராக நடால் கண்டுள்ள இந்த வெற்றி, ஏடிபி போட்டிகளில் அவரது 500-ஆவது வெற்றியாகும்.

இவான் - கிறிஸ்டினா இணைக்கு கோப்பை

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் கலப்பு இரட்டையா் பிரிவில் குரோஷியாவின் இவான் டோடிக்/பிரான்ஸின் கிறிஸ்டினா மெலாடெனோவிச் இணை சாம்பியன் ஆனது. போட்டித்தரவரிசையில் 5-ஆவது இடத்திலிருந்த இந்த ஜோடி, இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜேசன் குப்லா்/ஜேமி ஃபோா்லிஸ் இணையை 6-3,6-4 என்ற நோ் செட்களில் தோற்கடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com