மே.இ. தீவுகள் டி20 தொடர்: தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான், சாய் கிஷோர் தேர்வு

மாற்று வீரர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானும் சாய் கிஷோரும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள்.
ஷாருக் கான்
ஷாருக் கான்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் மாற்று வீரர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானும் சாய் கிஷோரும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள்.

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. 

இத்தொடர்களில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணிக்கான மாற்று வீரர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானும் சாய் கிஷோரும் தேர்வாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரஞ்சி கோப்பைப் போட்டியின் ஆரம்ப ஆட்டங்களில் இருவரும் இடம்பெற மாட்டார்கள் எனத் தெரிகிறது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே போட்டிகளில் கடைசிக்கட்டங்களில் 26 வயது ஷாருக் கான் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார். சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை இறுதிச்சுற்றில் கடைசி 4 ஓவர்களில் தமிழக அணி வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் ஷாருக் கான் களமிறங்கியிருந்தார். அதனால் அணியைக் கரை சேர்க்க வேண்டிய மொத்தப் பொறுப்பும் அவரிடம் இருந்தது. கடைசி 7 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டன. பிறகு கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான அந்தத் தருணத்தில் அற்புதமான சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியை வழங்கினார் அதிரடி வீரர் ஷாருக் கான். அந்த ஆட்டத்தில் 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார். 

25 வயது சாய் கிஷோர், 2020 சையத் முஷ்டாக் அலி போட்டியில் தமிழக அணி கோப்பையை வெல்ல பெரிதும் உதவினார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர், மிகக்குறைவான ரன்கள் கொடுத்து அசத்தினார். விளையாடிய 8 ஆட்டங்களிலும் அவருடைய பந்துவீச்சு தமிழக அணிக்குப் பெரிதும் உதவியது. முக்கியமாக பவர்பிளே ஓவர்களில் இவருடைய பந்துவீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து அதிக ரன்களை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. 8 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 4.82. நாக் அவுட் ஆட்டங்களில் சாய் கிஷோரின் பந்துகளில் எதிரணி வீரர்கள் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினார்கள். 2021 சையத் முஷ்டாக் அலி போட்டியில் 8 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகளை எடுத்து தமிழக அணி சாம்பியன் ஆக உதவினார். எகானமி - 6.06.

சாய் கிஷோர்
சாய் கிஷோர்

கடந்த வருடம், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்குத் தேர்வானார் சாய் கிஷோர். மாற்று வீரராக இந்திய அணியில் இடம்பிடித்து இலங்கைக்குச் சென்ற சாய் கிஷோர், பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். 2019 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு சாய் கிஷோரைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எனினும் இதுவரை ஒரு வாய்ப்பு கூட சாய் கிஷோருக்கு வழங்கப்படவில்லை. 

மாற்று வீரர்களாக இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ள ஷாருக் கானும் சாய் கிஷோரும் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com