இன்று 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா: 361 ரன்கள் முன்னிலை

4-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா: 361 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து 361 முன்னிலை பெற்றுள்ளது.

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சதமடித்த பேர்ஸ்டோ, 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிராஜ் 4, பும்ரா 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில்  45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. பும்ரா 50, ரிஷப் பந்த் 30 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று புஜாரா 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு 76 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் ரிஷப் பந்த். முதல் இன்னிங்ஸில் 146 ரன்கள் எடுத்தவர் 2-வது இன்னிங்ஸில் அரை சதமெடுத்தார். ஒரே டெஸ்டில் சதமும் அரை சதமும் எடுத்த 2-வது இந்திய விக்கெட் கீப்பர், ரிஷப் பந்த். இதற்கு முன்பு 1973-ல் மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய விக்கெட் கீப்பரான ஃபரூக் இன்ஜினியர் சதமும் அரை சதமும் எடுத்தார். மேலும் இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற டெஸ்டில் சதமும் அரை சதமும் எடுத்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்கிற புதிய சாதனையை ரிஷப் பந்த் படைத்தார். 

சுறுசுறுப்பாக மூன்று பவுண்டரிகள் அடித்த ஷ்ரேயஸ் ஐயர், 19 ரன்களுக்கு பாட்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணிக்கு நம்பிக்கையளித்த ரிஷப் பந்த், லீச் பந்தில் ஸ்லிப்பில் கேட் கொடுத்து 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆல்ரவுண்டராக ஜொலிப்பார் என்கிற நம்பிக்கையில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ஷர்துல் தாக்குர், பேட்டிங்கில் மீண்டும் ஏமாற்றமளித்தார். 26 பந்துகளில் 4 ரன்களை எடுத்து பாட்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

4-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 17, ஷமி 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 361 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com