5-வது டெஸ்டில் விராட் கோலியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் பற்றி இங்கிலாந்து பேட்டர் பேர்ஸ்டோ பதிலளித்துள்ளார்.
பிர்மிங்கமில் நடைபெறும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சதமடித்த பேர்ஸ்டோ, 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிராஜ் 4, பும்ரா 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. பும்ரா 50, ரிஷப் பந்த் 30 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸில் கோலி - பேர்ஸ்டோ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உன் வேலையை மட்டும் பார் என கோலி சைகையில் பேர்ஸ்டோவிடம் கூறியது போல இருந்தது. எனினும் பேர்ஸ்டோ சதமடித்தபோது கோலி கைத்தட்டி பாராட்டு தெரிவித்தார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் பற்றி பேர்ஸ்டோ கூறியதாவது:
இருவரும் 10 வருடங்களாகக் களத்தில் சந்தித்து வருகிறோம். அது கொஞ்சம் ஜாலியானது. இருவரும் போட்டி மனப்பான்மையுடன் களத்தில் செயல்படுவோம். நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறோம். இருவருமே தீவிரமான போட்டியாளர்கள். இந்தப் போட்டி மனப்பான்மை எங்களுடைய சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த உதவுகிறது. இது (மோதல்) விளையாட்டின் ஓர் அங்கம் என்றார்.